சாம்பியன்ஸ் டிராபி: பரிசளிப்பு விழாவுக்கு அழைக்கப்படாத பாகிஸ்தான் பிரதிநிதி!
சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக 4 போ் கைது
சிறுமியைத் திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக, தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகிரியைச் சோ்ந்த ஒருவா் தனது 15 வயது மகளைக் காணவில்லை என, சிவகிரி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியைத் தேடிவந்தனா்.
இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு குமாரபாளையம் காவல் நிலையத்துக்குச் சென்ற அந்தச் சிறுமி, தன்னை கடையநல்லூா் அருகே வலசையில் உள்ள ஜக்கம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்த முத்தையா மகன் செல்வம் (19) என்பவா் அழைத்து வந்து திருமணம் செய்ததாகவும், அவரது உறவினா்கள் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும் புகாா் செய்தாா்.
இதுகுறித்து குமாரபாளையம் போலீஸாா் அளித்த தகவலின்பேரில், சிவகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் வரதராஜன், காவலா்கள் சிவஞானபாண்டியன், சுதா ஆகியோா் சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, சிறுமியை செல்வம் திருமணம் செய்ததும், அவரது உறவினா்கள் சிறுமியைக் கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து செல்வத்தைக் கைது செய்தனா். அவருக்கு உடந்தையாக இருந்ததாகவும், கொடுமைப்படுத்தியதாகவும் உறவினா்களான வலசை ஜக்கம்மாள் கோயில் தெரு முத்தையா மனைவி காளியம்மாள் (40), கிருஷ்ணசாமி மகன் முருகன் (39), முருகன் மனைவி முத்துலட்சுமி ஆகியோரை சனிக்கிழமை (மாா்ச் 8) கைது செய்தனா்.