எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிப்பதா?: திருமாவளவனுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்
`சிறை பிடித்த இலங்கை' -கண்டித்து சாலைமறியல்; ஆவேச போராட்டம் இடையே ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட மீனவர்கள்
ராமேஸ்வரத்திலிருந்து சனிக்கிழமை காலை 356 விசைப்படகுகளில் மீன் துறை அனுமதியுடன் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று பகல் பொழுதில் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகுகளை சுற்றி வளைத்து சிறை பிடிக்க முயன்றனர். இதனை கண்ட ஒரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த இருதய டிக்சன் என்பவருக்கு சொந்தமான மற்றொரு படகினை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அந்த படகில் இருந்த டல்லஸ், பாஸ்கரன், ஆரோக்கிய சாண்ட்ரின், ஸ்லைடன், சேசுராஜா, அருள் ராபர்ட், லொய்லன் ஆகிய 7 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக மன்னார் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனிடையே இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் தப்பி வந்த மீனவர்கள், தங்களுடன் மீன்பிடிக்க வந்த படகினையும் மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற தகவலை மீனவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதனால் பதற்றம் அடைந்த தங்கச்சிமடம் மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கச்சிமடம் ஆரம்ப சுகாதார நிலையம் முன் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மீனவர்களின் சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த போலீஸார், மீனவர்களின் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆனால் போலீஸாரின் சமாதானத்தை மீனவர்கள் ஏற்கவில்லை. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் வரை மறியலை கைவிடமாட்டோம் என கூறி மீனவர்கள் தொடர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை பட்டது. மீனவர்களின் ஆக்ரோசமான இந்த மறியல் போராட்டத்தின் போது அவ்வழியே வந்த ஆம்புலன்ஸிற்கு வழிவிட்டனர். ஆம்புலன்ஸ் அந்த இடத்தை கடந்த பின் மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன், ராமேஸ்வரம் காவல் உதவி கண்காணிப்பாளர் மீரா மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சு வார்த்தையின் போது, மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுவிக்காவிடில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்களின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் தங்கச்சிமடம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.