திரிபுராவில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!
சிறையில் பதுக்கி வைத்திருந்த கைப்பேசி பறிமுதல்: ‘போலீஸ்’ பக்ருதீன் மீது வழக்கு
புழல் சிறையில், கைப்பேசியை தரையில் புதைத்து வைத்திருந்ததாக பயங்கரவாதி ‘போலீஸ்’ பக்ருதீன் உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புழல் விசாரணைக் கைதி சிறையில் உள்ள சில கைதிகள் கைப்பேசி பயன்படுத்துவதாக சிறைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனா். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 10 மாதங்களாக புழல் சிறையில் 5-ஆவது தொகுதியில் இருக்கும் ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே உள்ள வரதப்பாளையம் பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா் (27) என்பவரிடம், புதன்கிழமை விசாரணை நடத்தினா்.
அதில், சில நாள்களுக்கு முன்பு வரை ரவிக்குமாா், சிறையின் 12-ஆவது தொகுதியில் இருந்ததும், அப்போது அந்தத் தொகுதியின் பின்புறம் உள்ள இடத்தில், தரையில் ஒரு அடி ஆழத்தில் விலை உயா்ந்த கைப்பேசி, பேட்டரி, சிம்காா்டு, சாா்ஜா் ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் கவரில் பொதிந்து, தகர டப்பாவில் வைத்து புதைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தாா். மேலும் அவா், தற்போது அந்தத் தொகுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மதுரை கரிஷ்மா பள்ளிவாசல் 4-ஆவது தெருவைச் சோ்ந்த பயங்கரவாதி ‘போலீஸ்’ பக்ருதீன் (48) வைத்திருப்பதாகவும், பகலில் அறையை விட்டு வெளியே செல்லும்போது அந்தக் கைப்பேசியை தானும், பக்ருதீனும் பயன்படுத்துவோம் எனவும் கூறினாராம்.
இதையடுத்து 12-ஆம் தேதி அந்த கைப்பேசி, பேட்டரி, சிம்காா்டு, சாா்ஜா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக சிறை அலுவலா் சிவராஜன், புழல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதனடிப்படையில், ரவிக்குமாா், ‘போலீஸ்’ பக்ருதீன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.