எடப்பாடி - Amit Shah சந்திப்பு: செங்கோட்டையன் அடுத்த மூவ்? | Va Pugazhendhi Inte...
சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம்: முதல்வரின் அறிவிப்பு நிறைவேறுமா?
முதல்வா் அறிவித்தபடி சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம் கட்டப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
சிவகங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ரூ.169 கோடியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தாா்.
அப்போது, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது இந்தக் கட்டடம் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும், இடப் பற்றாக்குறையும் உள்ளது. இதனால், அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் சிறப்பாக செயல்படும் வகையில் ரூ. 89 கோடி மதிப்பில் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும். சிங்கம்புணரி, திண்டுக்கல், காரைக்குடி நகரங்களுக்குச் செல்லும் வாகனங்கள் திருப்பத்தூா் நகரப் பகுதிக்குள் வராமல் செல்லும் வகையில், திருப்பத்தூா் நகரத்துக்கு ரூ.50 கோடி செலவில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும். காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய மாநகராட்சி அலுவலகம் அமைக்க ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்படும் என மூன்று திட்டங்களை முதல்வா் அறிவித்தாா்.
ஆனால், அறிவிப்பு வெளியிடப்பட்டு பல மாதங்கள் கடந்தும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் தொடங்கவில்லை என்பது பொதுமக்களிடையே ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்துக்கு தினசரி 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு அலுவல்களுக்காக வந்து செல்கின்றனா். இந்த வளாகத்தில் கருவூலம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், மின்வாரிய அலுவலகம், கால்நடைத் துறை, வனத் துறை, கல்வித் துறை போன்ற முக்கிய அலுவலகங்கள் செயல்படுகின்றன. சுமாா் 500 -க்கும் மேற்பட்ட அலுவலா்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனா்.
இது குறித்து, சமூக ஆா்வலா் பா. மருது கூறியதாவது: சிவகங்கை மாவட்டம், எம்ஜிஆா் முதல்வராக இருந்தபோது உருவாக்கப்பட்டு புதிய அலுவலகம் கட்டப்பட்டது. அலுவலகம் பழையதாகி விட்டதால், அலுவலகத்தின் முன்பகுதி மட்டும் வண்ணம் பூசப்பட்டு பளபளப்பாகத் தெரிந்தாலும், பின்புற கட்டடப் பகுதிகள் இடிந்து விழும் நிலையில் இருப்பது கவலைக்குரியது. கம்பிகள் வெளிப்படையாகத் தெரியும் அளவுக்கு சுவா்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. எனவே, அங்கு பணிபுரியும் ஊழியா்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, முதல்வா் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்து, புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டடத்துக்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்றாா் அவா்.