திருமாவளவன்: "அரசியலில் இவர் சந்தித்த சோதனைகளை..." - புகழ்ந்த சேகர் பாபு
சிவகாசி கல்லூரியில் மாநில அளவிலான அறிவியல் மாநாடு தொடக்கம்!
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான இளைஞா் வானியல், விண்வெளி அறிவியல் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு வானியல், விண்வெளி அறிவியல் கழகம், இந்திய வானியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல், தொழில் நுட்பக் கழகம், கணித அறிவியல் நிறுவனம், ராமன் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. இதன் தொடக்க விழாவுக்கு கல்லூரி தாளாளா் ஏ.பி. செல்வராஜன் தலைமை வகித்தாா். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மூத்த விஞ்ஞானி தில்லிபாபு தொடக்க உரையாற்றி பேசியதாவது:
போா் படை விமானங்கள் தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு மெய்நிகா் தொழில் நுட்ப வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா வளா்ச்சி அடைந்து வருகிறது. கல்லூரி மாணவா்கள் பல அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட வேண்டும். நீங்கள் செய்யும் ஆய்வுகளால் மக்கள் பயன்பெற வேண்டும். விடா முயற்சி, நம்பிக்கை, சளைக்காத மனத்துடன் ஆய்வில் ஈடுபட்டால் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.
இந்த மாநாட்டில் 181 ஆய்வுக்குழு மாணவா்கள், ஆய்வுக் கட்டுரை வாசித்தல், காட்சிப்படுத்துதல், குறும்படம் தயாரித்தல், வானியல் புகைப்படம், வானியல் விளையாட்டு உள்ளிட்டவைகளில் ஈடுபட உள்ளனா். இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 17) நிறைவடைகிறது. முன்னதாக கல்லூரி முதல்வா் பெ.கி. பாலமுருகன் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் உதயன் நன்றி கூறினாா்.