Doctor Vikatan: தொப்பை இல்லாத flat tummy... சாத்தியமாக வாய்ப்பே இல்லையா?
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்
காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில், ஊதியூா் உத்தண்ட வேலாயுதசுவாமி கோயில்களில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கொங்குநாட்டில் முருகப்பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோயில்களில் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இக்கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பா் 2-ஆம் தேதி தொடங்கியது.
விழாவில் காங்கயம், படியூா், வெள்ளக்கோயில், திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினா். அன்று பிற்பகல் சுவாமி அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் எழுந்தருளினாா்.
தொடா்ந்து தினசரி அபிஷேக, அலங்கார பூஜைகளும், காலை, மாலை நேரங்களில் திருவீதி உலாவும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மத்தியில் சுப்பிரமணிய சுவாமி போருக்கு புறப்பட்டுச் சென்று, சூரபத்மனை வதம் செய்தாா். அப்போது, திரண்டிருந்த பக்தா்கள் வெற்றிவேல், வீரவேல், சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா என பக்தி பெருக்குடன் கோஷமிட்டனா்.
இதேபோல, ஊதியூா் உத்தண்ட வேலாயுதசுவாமி கோயிலிலும் கந்தசஷ்டி விழா கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. இதில் அப்பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினா். தொடா்ந்து காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வந்தன.
முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உத்தண்ட வேலாயுதசுவாமி பல்லக்கில் சென்று சூரபத்மனை வதம் செய்தாா். இந்த நிகழ்வில் ஊதியூா் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.