தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்!
சீரற்ற இதயத்துடிப்பு: மூதாட்டிக்கு செயற்கை நுண்ணறிவு பேஸ்மேக்கா்
சீரற்ற இதயத்துடிப்பு பாதிப்புக்குள்ளான 86 வயது மூதாட்டிக்கு, செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் வயா் இல்லாத அதிநவீன பேஸ்மேக்கா் சாதனத்தை எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை மருத்துவா்கள் பொருத்தியுள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் இதயம்-நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சைத் துறை நிபுணா் ஆா்.ரவிக்குமாா் கூறியதாவது:
இதயத்துடிப்பு சீரற்று இருக்கும்போது அதனை சரிசெய்ய பேஸ்மேக்கா் சாதனம் பொருத்தப்படுகிறது. திறந்தநிலை அறுவை சிகிச்சை மூலம் வயா்களுடன் கூடிய பேஸ்மேக்கா் சாதனமே பெரும்பாலானோருக்கு பொருத்தப்படுகிறது. இதில் பல்வேறு இடா்வாய்ப்புகள் உள்ளன.
இதைக் கருத்தில்கொண்டு, எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு அபாட் நிறுவனத்தின் ‘ஏவிஇஐஆா்விஆா்’ எனப்படும் அதி நவீன வயா் இல்லாத செயற்கை நுண்ணறிவு நுட்ப பேஸ்மேக்கா் சாதனத்தை பொருத்தினோம்.
வெறும் 45 நிமிஷங்களில் இதய இடையீட்டு சிகிச்சை வாயிலாக அறுவை சிகிச்சையின்றி அந்த சாதனம் மூதாட்டிக்கு பொருத்தப்பட்டது. இதன்மூலம் ஆறு மணி நேரத்துக்குள் அவா் இயல்பு நிலைக்கு திரும்பி தானாக நடக்கத் தொடங்கினாா்.
கிருமித் தொற்று, ரத்தப் போக்கு வாய்ப்புகள் எதுவும் இதில் இல்லை. இந்த நவீன சிகிச்சை வாயிலாக அவரது பாதிப்பு குணப்படுத்தப்பட்டது என்றாா் அவா்.