சீலநாய்க்கன்பட்டி புறவழிச்சாலை பகுதியில் சரக்கு லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சேலம்: சேலம் சீலநாய்க்கன்பட்டி புறவழிச்சாலைப் பகுதியில் திங்கள்கிழமை காலை சரக்கு லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம் அருகே அயோத்தியாப்பட்டணம் பகுதியில் இருந்து அவிநாசியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான மரத்தூள் கட்டை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திங்கள்கிழமை காலை லாரி ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த லாரி சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலைப் பகுதியில் வளைவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மூட்டைகள் அனைத்தும் சாலையில் சிதறின. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரிக்கு செல்வோா், பணிக்கு செல்வோா் சிரமத்துக்கு ஆளாகினா்.
இதையறிந்த போக்குவரத்து போலீஸாா், உடனடியாக விரைந்துவந்து கவிழ்ந்து கிடந்த லாரியை தூக்கி நிறுத்தினா். பின்னா் சாலையில் விழுந்து கிடந்த மூட்டைகள் அனைத்தும் சாலையோரம் அடுக்கிவைக்கப்பட்டன. சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக புறவழிச்சாலைப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.