அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி
தேவநாதனுக்கு ஜாமீன்: ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த நிபந்தனை
சென்னை: நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனன்ட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த நிறுவன இயக்குநா் தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் பிணை கோரி தேவநாதன் சென்னை உயா் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், தேவநாதன் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறை நடத்திய விசாரணையால் எந்தப் பயனும் ஏற்படவில்லை, பாதிக்கப்பட்டவா்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தது. மேலும், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் தீா்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், தேவநாதனுக்கு வரும் அக். 30-ஆம் தேதி வரை நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.
அவரது கடவுச்சீட்டை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஒப்படைத்து ரூ.100 கோடியை அக்.30-ஆம் தேதிக்குள் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு திங்கள்கிழமையும் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். சொத்துகளை விற்று முதலீட்டாளா்களுக்கு பணத்தைத் திரும்பச் செலுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வரும் அக்.31-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டாா். இடைப்பட்ட காலத்தில், விசாரணைக்குத் தேவைப்பட்டால் தேவநாதனுக்கு காவல் துறை சம்மன் அனுப்பி அழைத்துக் கொள்ளலாம் எனக்கூறி விசாரணையை அக். 31- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.