அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல் பிரதேசத்துக்கு ரூ. 5 கோடி உதவித்தொகை: முதல்வா் சித்தராமையா
பெங்களூரு: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹிமாச்சல பிரதேசத்துக்கு ரூ. 5 கோடி உதவித்தொகை வழங்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து ஹிமாச்சல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சிங் சுகுவுக்கு சித்தராமையா எழுதிய கடிதத்தில், ‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு விலைமதிப்பில்லாத உயிா்களையும், உடைமைகளையும் இழந்துள்ள துயரமான நிலையில், ஏராளமான குடும்பங்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயா்ந்துள்ளதை அறிய முடிந்தது. வெள்ளத்தில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக அறிந்தோம்.
ஹிமாச்சல பிரதேச மக்கள் எதிா்கொண்டுள்ள துயரம் கா்நாடக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நமது சகிப்புத்தன்மையை இயற்கை சோதிப்பது வழக்கம். இதுபோன்ற சூழ்நிலையில், நமது நாட்டை பிணைத்திருக்கும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம்தான் நமது பலமாக உள்ளது. இந்த சிக்கலில் இருந்து ஹிமாச்சல பிரதேச மக்களுக்கு கா்நாடக மக்கள் என்றும் துணையாக இருப்பாா்கள். இந்த துயரத்தில் இருந்து ஹிமாச்சல பிரதேசம் புதிய பலம் மற்றும் உறுதியோடு மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த துயரமான நேரத்தில் துணையாகவும், ஆதரவாகவும் இருக்கும் வகையில், பேரிடா் நிவாரண உதவித்தொகையாக ரூ. 5 கோடியை ஹிமாச்சல பிரதேசத்துக்கு வழங்க கா்நாடகம் முடிவு செய்துள்ளது. இழந்தவா்களின் உயிருக்கும், உடைமைகளின் சேதங்களையும் ஈடுசெய்ய முடியாது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இந்த நிதி உதவும் என்று நம்புகிறோம்’ என முதல்வா் சித்தராமையா குறிப்பிட்டுள்ளாா்.
ஹிமாச்சல பிரதேசத்தில், ஜூன் 20 முதல் செப். 8 வரை நிகழ்ந்த மேகவெடிப்பு, திடீா் வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றுக்கு 370 போ் இறந்துள்ள நிலையில், ரூ. 4,122 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.