சுட்டிக்காட்டிய விகடன்; மத்திய கைலாஷ் சாலையில் மூடப்பட்ட வடிகால்; நடவடிக்கை எடுத்த மாநகராட்சி!
சென்னையின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான வல்லபாய் பட்டேல் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், அடையார் மற்றும் டைடல் பார்க் பகுதிகளிலிருந்து இருந்து வரும் வாகனங்களால் எப்போதுமே போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிப்பதை அந்த பகுதியை கடந்து செல்பவர்கள் அனுபவித்திருப்பார்கள்.
டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழையின் போது மத்திய கைலாஷிலிருந்து சுமார் 100 அடி தொலைவில் மழை நீர் வடிகால் கால்வாயின் மேல்மூடி திறந்து இருந்தது. தற்காலிக தடுப்பாக பிளாஸ்டிக் பேரிகார்டு குறுக்கே வைக்கப்பட்டிருந்தது. அதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே அப்பகுதியை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. இது குறித்து நமது விகடனில் கடந்த 02.12.2024 அன்று, "சாலையின் நடுவே திறந்து கிடக்கும் மழைநீர் வடிகால் ,.. மத்திய கைலாஷில் கடும் நெரிசல் - சரி செய்யப்படுமா?" என்று கள நிலவரத்தை விரிவாகச் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இந்த நிலையில், தற்போது நாம் சுட்டிக்காட்டிய திறந்து கிடந்த மழைநீர் வடிகால் கால்வாய் முழுமையாக மூடப்பட்டு, சரி செய்யப்பட்டுள்ளது. தற்காலிகமாக சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் குறைந்து ஓரளவுக்கு வாகனங்கள் எளிதாக கடந்து செல்ல முடிகிறது.