விவசாயிகளை பாகிஸ்தானிலிருந்து நுழைந்தவர்களைப் போல நடத்துவதா? காங். கேள்வி
பிராட்வே: குளமாகிப்போன மாநகராட்சிப் பூங்கா; ஆபத்தை உணராத சிறுவர்கள்.. அலட்சியம் வேண்டாமே அதிகாரிகளே!
தமிழகம் முழுவதுமே கனமழை பெய்து கொண்டிருப்பதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியுள்ளது. அங்குள்ள பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு எச்சரிக்கை விடுத்து வருகிற நிலையில், சென்னை மாநகராட்சி பூங்காவில் தோண்டப்பட்ட குழியில் கடந்த 2 மாதங்களாக எந்த பணியையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது மாநகராட்சி.
சென்னை மாநகராட்சியின் 57-வது வார்டில், பிராட்வேக்கு அருகே பிரகாசம் சாலையில் அமைந்திருக்கிறது, ஸ்ரீ ராமுலு பூங்கா. சென்னை மாநகராட்சியின் பராமரிப்பின் கீழ் இருக்கிற இந்த பூங்காவில், மழைநீர் சேகரிப்புக்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, இரண்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், அதன் பிறகு அந்த குழியில் மழைநீர் சேகரிப்பிற்கான எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த ஃபெஞ்சல் புயலை ஒட்டி பெய்த கனமழையால் அந்தக் குழியில் தண்ணீர் தேங்கியுள்ளது.
குறைந்தது 4 அடி பள்ளம் கொண்ட அந்தக் குழியில் அந்தப் பூங்காவைச் சுற்றியுள்ள குடிசைப் பகுதி பள்ளி சிறுவர்கள் ஆபத்தை உணராமல், நீச்சல் குளத்தில் குளிப்பதை போன்று குளித்துக் கொண்டிருக்கிறார்கள். மாசடைந்த நீரில் தொடர்ந்து சிறுவர்கள் குளிப்பதன் மூலம் எளிதில் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இவர்களோடு வருகிற 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதனை வேடிக்கை பார்க்கிறார்கள், சிறுவர்கள் இல்லாதபோது
தனியாக அந்த குழியை ஒட்டி நின்றுக் கொண்டு கற்களை உள்ளே போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தவறி குழியில் விழுந்தால் உயிரிழப்பதற்கான மிகப் பெரிய ஆபத்தும் உள்ளது.
மேலும், அந்த குழியில்தான் மின் விளக்குக்கான மின்சார வயர் சென்றுகொண்டிருக்கிறது. பிராட்வே-வையும் மண்ணடியையும் இணைக்கிற சாலையில் அமைந்திருக்கிற இந்தப் பூங்காவை அதனைச் சுற்றி வேலை செய்கிற பலர் உணவருந்தும் இடமாக, ஓய்வெடுக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அதனை சுற்றியுள்ள பள்ளிக் கல்லூரி மாணவர்களும் அதிகளவில் பூங்காவை பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாக மோட்டார் வேலை செய்யவில்லை எனக் கூறி கழிவறை பூட்டப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள சிறுவர்கள் விளையாடும் சறுக்கல் பலகை ஓட்டை விழுந்தும், ஊஞ்சல் கம்பியில் ஊஞ்சல் இல்லாமலும் ( சுற்றியுள்ள கம்பி மட்டுமே உள்ளது) மேலும் பல பொருட்கள் சேதமடைந்தும், குழிக்காக தோண்டப்பட்ட மண் சூழ்ந்தும் உள்ளன.
இது குறித்து பூங்காவின் காவலாளி கூறியதாவது, "இந்தக் குழிய தோண்டி 2 மாசம் ஆச்சு, ஆனா அதுக்கப்புறம் ஒன்னும் நடக்கல, பசங்கள இந்தக் குழியில் குளிக்காதீங்கன்னு சொன்னாலும் கேக்க மாட்டுக்காங்க. கரன்ட் வயரும் கீழ போகுறதுனால பசங்க போனதுக்கு அப்றம்தான் லைட்டே போடுறேன். மோட்டார்ல மண் அடைச்சிருச்சி. அதனால பாத்ரூம்ல தண்ணி வராததுனால பூட்டிடேன், பக்கத்து கடைக்காரங்க, போலீஸ்காரங்க எல்லாம் பாத்ரூம்க்காக இங்கதான் வருவாங்க. எனக்கும் வயசாகிடுச்சு பாத்ரூம் இல்லாம ரொம்ப கஷ்டமாக இருக்கு. அதிகாரிகள்கிட்ட இத சரி பண்ணச் சொல்லியிருக்கேன்" என்றார் சோகமாக.
இது தொடர்பாக 57-வது வார்டு உறுப்பினர் ராஜேஷ் ஜெயின் கூறியதாவது, "அந்த இடத்தில் பிரச்னை இருக்கிறது, அதனை சரி செய்ய சொல்கிறேன். 3 நாள்களில் சரி செய்து விடுவார்கள்" என்றார் சுருக்கமாக.
மாநகராட்சி அதிகாரிகள் இது போன்று தண்ணி தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்து, உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் அதனை சரி செய்ய வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.