3 நாளாக கனமழை... நெல்லை, தூத்துக்குடியை புரட்டிப்போடும் காட்டாற்று வெள்ளம்..!
கனமழை ஆய்வு: ``முடியாவிட்டால், ராஜினாமா செய்யுங்கள்!" -ஆவேசமான மக்கள்; பாதியில் கிளம்பிய அமைச்சர்!
கடந்த இரண்டு நாள்களாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்ததில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாய் மாறியிருக்கின்றன. இதைத்தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக பேரிடர் மீட்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் துரித கதியில் செயல்பட்டு மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படைத்தேவைகளான உணவு, உடை உள்ளிட்டவைகளை தருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
இந்தநிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வந்தார். அவர், ஆலங்குளம் பழைய காவல் நிலையம் முன்பு வந்திறங்கியபோது, அங்கு கூடியிருந்த இளைஞர்கள் சிலர், அமைச்சரை வழிமறித்து தங்கள்பகுதியில் மழைவெள்ளம் சூழ்ந்திருப்பது தொடர்பாக பேசினர்.
அப்போது "நெல்லை - தென்காசி இடையே நான்குவழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் ஒருபகுதியாக ஆலங்குளம் காவல் நிலையம் அருகே பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகிறனர். இந்த பால வேலையால்தான் தென்பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், மருத்துவமனை, அரசுப் பள்ளி செல்லும் மாணவர்கள், சுடுகாட்டிற்கு செல்வோர்கள் என பொதுமக்கள் அனைவருமே 2 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு ஏற்படுத்தி தரவும் பால பணிகள் முடிவுறும்வரை பள்ளி மாணவர்கள் , பொதுமக்கள் சாலையை கடக்க வசதியாக அப்பகுதியில் மாற்றுப் பாதை ஏற்படுத்தித் தரவேண்டும்" என கோரிக்கை வைத்தனர்.
அப்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திடீரென குறுக்கிட்டு பேசினர். இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள், "சாலை பணியை முடிக்க முடியாவிட்டால் பணியை ராஜினாமா செய்துவிட்டு போங்கள்" என ஆவேசமாக கூறினர்.
தொடர்ந்து, 'சரியான பாதை ஏற்படுத்தாமல் பாலம் பணி மேற்கொண்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒழிக!', என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆகியோர் முன்பு கோஷம் எழுப்பினர். இதனால் அந்த இடம் பரபரப்பானது. இதனையடுத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அங்கிருந்து பாதியில் கிளம்பிச் சென்றார்.