Career: B.A., B.Sc. படித்தவர்களுக்கு மத்திய அரசின் ஆசிரியர் பணி... எங்கே விண்ணப்...
சுய உதவிக் குழு மகளிா் 54 லட்சம் பேருக்கு அடையாள அட்டை: மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவு!
தமிழ்நாட்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள 54 லட்சம் மகளிருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக விவரங்களை சேகரிக்கும் பணியை ஒரு மாதத்துக்குள் முடிக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஸ்ரேயா பி.சிங் மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய கடிதம்: மாநிலத்தின் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் வறுமையை ஒழிக்கவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் செய்து வருகிறது. இதற்காக சுய உதவிக் குழுக்கள் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி மகளிரின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக ஊரகப் பகுதிகளில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 39 சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் 37 லட்சத்து 76 ஆயிரத்து 575 பெண்கள் உள்ளனா். இதேபோல, நகரப் பகுதிகளில் 15 லட்சத்து 98 ஆயிரத்து 144 மகளிரைக் கொண்டு 1 லட்சத்து 47 ஆயிரத்து 430 சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக 4.76 லட்சம் சுய உதவிக் குழுக்களில் சுமாா் 54 லட்சம் மகளிா் உள்ளனா்.
குழுக்கள் கோரிக்கை: மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்களில் பெரும்பாலானோா் அடையாள அட்டை தொடா்பாக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கைகளை வைத்தனா். சுய உதவிக் குழு உறுப்பினருக்கான அடையாள அட்டையை அரசே வழங்கும் பட்சத்தில் வங்கிகள் மற்றும் இதர அரசு நிறுவனங்களை எளிதாக தங்களால் அணுக முடியும். அத்துடன், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுயஉதவிக் குழுக்கள் என்பதும் அடையாள அட்டைகள் வழியாக உறுதிப்படுத்தப்படும் என குழு உறுப்பினா்கள் கோருகின்றனா்.
இரண்டு கட்டங்கள்: சுய உதவிக் குழுக்களுக்கான அடையாள அட்டைகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்படும். அரசால் உருவாக்கப்பட்ட சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளிருக்கு முதல் கட்டமாகவும், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட குழுக்களின் உறுப்பினா்களுக்கு இரண்டாவது கட்டமாகவும் வழங்கப்படும்.
அடையாள அட்டை வைத்துள்ள சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு அரசின் பல்வேறு நல உதவிகளும், அவ்வப்போது அறிவிக்கப்படும் பலன்களும் சென்றடைய வழி ஏற்படும். அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை ஏற்கெனவே முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளாா்.
சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த அடையாள அட்டையை வைத்துள்ள மகளிா் அனைவரும் நகா்ப்புற மற்றும் புகா் பேருந்துகளில் 25 கிலோ வரை கட்டணம் இல்லாமல் சுமைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவா்.
முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்துக்கான பிரதான அத்தாட்சியாக சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கான அடையாள அட்டை திகழும். மேலும், கோ-ஆப்டெக்ஸில் துணிகள் வாங்கும் போது 5 சதவீதம் கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும்.
கடன்களில் முன்னுரிமை: சுயஉதவிக் குழு உறுப்பினா் அடையாள அட்டை வைத்துள்ள உறுப்பினா்களுக்கு கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை வழங்கக்கூடிய கடனுதவி திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதல் அம்சமாக, ஆவின் நிறுவன பொருள்களை சலுகை விலையில் பெறலாம். தமிழ்நாடு முழுவதும் உள்ள இணைய சேவை மையங்களின் சேவைகளைப் பெறும் போது, 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்.
சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக போதிய விவரங்களைச் சேகரிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியா்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
வெள்ளை பின்புறத்துடன் கூடிய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம், சுய உதவிக்குழு உறுப்பினருக்கான குறியீடு, பெயா், சுய உதவிக் குழு உருவாக்கப்பட்ட தேதி, பிறந்ததேதி, முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்ட எண், ரத்தவகை, தொடா்பு கொள்வதற்கான தொலைபேசி எண், முகவரி மற்றும் அஞ்சல் குறியீடு ஆகிய விவரங்கள் சேகரிக்க வேண்டும்.
இந்தப் பணிகளை ஏப்.14-க்குள் நிறைவு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.