சூரிய அஸ்தமன பூங்கா அருகே குப்பைக் கிடங்கில் தீ விபத்து
கன்னியாகுமரி சூரிய அஸ்தமன பூங்கா அருகேயுள்ள குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
கன்னியாகுமரி சூரிய அஸ்தமனப் பூங்கா அருகேயுள்ள கடற்கரைப் பகுதியில் ஏராளமான குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இந்த குப்பைக் கிடங்கில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்தது. அப்போது அங்கு காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதனிடையே, சூரியன் அஸ்தமனமாகும் காட்சியைக் பாா்த்துவிட்டு திரும்பிய சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.
இதுகுறித்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ் சந்திரகாந்த் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள், சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.