பிளக்ஸ் பேனர் வேண்டாம்..! விஜய் பிரசார பயண வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
சென்னை: கோயம்பேட்டில் அரசு பேருந்தை திருடிய வடமாநில இளைஞர் - நெல்லூரில் சிக்கிய பின்னணி!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுக்கு சொந்தமான பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டிச் செல்ல டிரைவரும் கண்டக்டரும் நேற்று (11.9.2025) வந்தனர். அப்போது அங்கு பேருந்து இல்லை. அதனால், டிரைவரும் கண்டக்டரும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்த கிளை மேலாளர் ராம்சிங்கிடம் விவரத்தைக் கூறினர். அதனால் அதிர்ச்சியடைந்த ராம்சிங்கும், டிரைவர், கண்டக்டர் ஆகியோர் கோயம்பேடு பேருந்து நிலையம் முழுவதும் அந்தப் பேருந்தை தேடினர். ஆனால் எங்கும் அந்தப் பேருந்து இல்லை. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலைய பகுதியில் உள்ள சி.சி.டி.வி-க்களை போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, நள்ளிரவில் பேருந்தை இளைஞர் ஒருவர் ஓட்டிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த இளைஞர் யார் என்று போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தெரியவில்லை. இதையடுத்து பேருந்தைக் காணவில்லை என கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் கிளை மேலாளர் ராம்சிங் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து பேருந்து எங்கு செல்கிறது என்பதை தேட தொடங்கினர்.

இந்த சமயத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூர் போலீஸார், கோயம்பேடு போலீஸாரை தொடர்பு கொண்டனர். தமிழக அரசுக்கு சொந்தமான பேருந்தை வடமாநில இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்றார். அவரை மடக்கிப் பிடித்து பேருந்தை நெல்லூர் பகுதியில் நிறுத்தி வைத்திருக்கிறோம் என்ற தகவலைத் தெரிவித்தனர். அதைக்கேட்டு கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸாரும் போக்குவரத்து கழக ஊழியர்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். இதையடுத்து கோயம்பேட்டிலிருந்து போலீஸார் தலைமையில் போக்குவரத்து கழக டீம் நெல்லூருக்கு சென்றது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தையும் அதை திருடிச் சென்ற வடமாநில இளைஞரையும் போலீஸார் சென்னைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவரிடம் விசாரித்தபோதுதான் அவர் (காது கேட்காதவர், வாய் பேச முடியாதவர்) மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து சைகை மூலம் அவரிடம் கோயம்பேடு பேருந்து நிலைய போலீஸார் விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் ஞானரஞ்சன் சாஹூ (24) என்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் கவனக்குறைவாக செயல்பட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பேருந்து திருடப்பட்ட தகவலை உடனடியாக போக்குவரத்து கழக தரப்பிலிருந்து எங்களுக்கு புகாராக கொடுக்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் ஆந்திர மாநில போலீஸார், எங்களைத் தொடர்பு கொண்டு தமிழக அரசுக்குச் சொந்தமான பேருந்தை வடமாநில இளைஞர் ஒருவர் பயணிகள் இல்லாமல் தனியாக ஓட்டி வந்ததாகவும் அவரிடம் விசாரித்தபோதுதான் அது திருடப்பட்டதும் தெரியவந்தது என்ற தகவலை எங்களிடம் தெரிவித்தனர். நெல்லூர் மாநில போலீஸார், சந்தேகத்தின் பேரில் அரசு பேருந்தை மடக்கி விசாரிக்கவில்லை என்றால் வடமாநில இளைஞர், பேருந்தை வேறு எங்காவது ஓட்டிச் சென்றிருப்பார். இந்தத் தகவல் கிடைத்தவுடன் போக்குவரத்து கழக அதிகாரியிடம் பேருந்து ஏதாவது திருடப்பட்டிருக்கிறதா என கேட்டோம். அதன்பிறகே எங்களுக்கு புகார் வந்தது. நல்லவேளையாக பேருந்தை மீட்டு அதை திருடிச் சென்ற வடமாநில இளைஞரை கைது செய்துவிட்டோம்" என்றனர்.