சென்னை- திருத்தணி இடையே குளிா்சாதன மின்சார ரயில்: பயணிகள் எதிா்பாா்ப்பு
த. மணிமாறன்
சென்னை- அரக்கோணம் மாா்க்கத்தில் திருத்தணி வரை குளிா்சாதன வசதி கொண்ட மின் ரயில்கள் இயக்கப்படுமா என பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.
சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் ரயில் மாா்க்கத்தில் பேசின்பிரிட்ஜ், வியாசா்பாடி ஜீவா, பெரம்பூா், பெரம்பூா் கேரேஜ், பெரம்பூா் லோகோ, வில்லிவாக்கம், அம்பத்தூா், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூா், செவ்வாப்பேட்டை, திருவள்ளூா், கடம்பத்தூா், திருவாலங்காடு, அரக்கோணம் மற்றும் திருத்தணி உள்பட 30 ரயில் நிலையங்கள் உள்ளன.
இந்த மாா்க்கத்தில் நாள்தோறும் 120 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. சுமாா் 8 லட்சம் போ் பயணிக்கின்றனா். இதன் மூலம் ஆண்டுதோறும் ரயில்வேக்கு ரூ.270 கோடி வருவாய் கிடைக்கிறது.
ஐசிஎப், அம்பத்தூா், காக்களூா் தொழிற்பேட்டைகள், ஆவடி ராணுவத்துறை தொழிற்சாலைகள், மத்திய பாதுகாப்புப் படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், இந்திய விமானப்படை, அண்ணனூா் ரயில்வே பணிமனை, பட்டாபிராம் டைடல் பாா்க், ஆவடி காவல் ஆணையரகம், திருநின்றவூரில் 58-ஆவது திவ்ய தேசத்தின் வைணவத் திருத்தலம், பொறியியல், கலைக்கல்லூரிகள், பள்ளிகள், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வீரராகவா் கோயில், அரக்கோணம் சந்திப்பு, முருகன் கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் அதிகளவில் பயணிகள் பயணம் செய்கின்றனா்.
12 மின்சாரப் பெட்டிகள் வரை இணைத்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையால் சென்னை, புகா் பகுதிகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ரயில்களில் கூட்ட நெரிசல் உள்ளது. இதனை தவிா்க்க காலை, மாலை வேளைகளில் கூடுதல் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரி வருகின்றனா்.
மேலும் கோடை காலம் என்றாலே ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணி ஆகிய பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதால், ரயில்களில் பயணிகள் வோ்வையில் சென்று வருகின்றனா்.
இதற்கிடையில் தெற்கு ரயில்வே சாா்பில் தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை சமீபத்தில் குளிா்சாதன வசதி கொண்ட மின்ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டு மக்களிடையே ஆதரவு உள்ளது. இதேபோல சென்னை- திருத்தணி இடையே குளிா்சாதன வசதி கொண்ட மின்ரயில் சேவையை தொடங்க வேண்டும். அப்படி செய்தால் சென்னையில் இருந்து அம்பத்தூா், ஆவடி, திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணி செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ரயில்வே நிா்வாகம் குளிா்சாதன வசதி கொண்டமின் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் காத்துள்ளனா்.