2 வது முறையாக அதிபர் டிரம்ப்-ஐ சந்திக்க கத்தார் பறந்தார் முகேஷ் அம்பானி!
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து 2வது முறையாக அவரைச் சந்திக்க முகேஷ் அம்பானி கத்தார் நாட்டுக்குச் சென்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அரசு முறைப் பயணமாக கத்தார் நாட்டுக்கு சென்றுள்ளார். அவரைச் சந்திக்க ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி அந்நாட்டு தோஹா நகருக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் தோஹாவிலுள்ள லுசைல் மாளிகையில் கத்தார் மன்னர், அதிபர் டிரம்ப்-க்கு இன்று (மே 14) அளிக்கும் அரசு விருந்தில் முகேஷ் அம்பானியும் கலந்துக்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் மிகப் பெரியளவில் அம்பானியின் நிறுவனங்களின் மீது முதலீடு செய்துள்ளன.
இத்துடன், வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதியில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈடுபட்டிருந்தது. ஆனால், தென் அமெரிக்க நாடுகளிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளின் மீது அதிபர் டிரம்ப் 25 சதவிகிதம் வரி விதித்ததினால் மார்ச் மாதம் அந்த இறக்குமதி நிறுத்தப்பட்டது.
அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டா ஆகியவை அம்பானியின் டிஜிட்டல் முயற்சிகளில் பங்குகளை வாங்கியுள்ளன.
முன்னதாக, அம்பானி குடும்பம் அதிபர் டிரம்ப்-ன் குடும்பத்துடன் நெருங்கிய உறவை பகிர்ந்து வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவில் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
மேலும், பதவியேற்புக்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விருந்தாளிகளுக்கு டிரம்ப் வழகிய விருந்தில் அம்பானி குடும்பம் கலந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: போர்களின் முடிவுக்கு உலகத் தலைவர்களுக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார்! புதிய போப்!