6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்!
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில், 6 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 3% ஆகும்.
இதன்மூலம், 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு மைக்ரோசாஃப்ட்டில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
செய்யறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூடிங் துறைகளில் கணிசமான வளர்ச்சியை எட்டிய பிறகும் மைக்ரோசாஃப்டில் அதிக எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.
இது குறித்து மைக்ரோசாஃப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்முகத்தன்மை வாய்ந்த சந்தையில் வெற்றிப்பட்டியலில் மிகச்சிறந்த இடத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டியதால், நிறுவனத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பணிநீக்கமானது, ஊழியர்களின் வேலையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதல்ல. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பணியில் சிறந்த பங்களிப்பை அளிக்காதவர்களை மைக்ரோசாஃப் பணிநீக்கம் செய்திருந்தது.
இம்முறை செய்யப்பட்டுள்ள பணிநீக்கமானது முற்றிலும் செய்யறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங்கிற்கு முன்னுரிமை அளித்து, அதில் கவனம் செலுத்தும் வகையில் நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றங்களை செய்துவருவதன் ஒரு பகுதியாக இப்பணிநீக்கம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!