இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பானது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களினால் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதனால், இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் கடுமையான ராணுவ மோதல்கள் நடைபெற்றன.
இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் தற்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து வெளிநாடுகளின் தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்கி வருகின்றார்.
இந்நிலையில், அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்புகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மதிப்பாய்வு செய்தனர். அவர்களின் பரிந்துரைகளின்படி அவருக்கு வழங்கப்பட்ட ‘இசட்’ பிரிவு பாதுகாப்புப் பேரணியில் புதியதாக தற்போது இரண்டு குண்டு துளைக்காத வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பானது மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற மதிப்பாய்வின் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட ‘வொய்’ பிரிவு பாதுகாப்பு ‘இசட்’ பிரிவாக உயர்த்தப்பட்டது.
மத்திய ரிசர்வ் காவல் படையின் விஐபி பாதுகாப்பு பிரிவினர் அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
இந்தப் பிரிவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்பட 200 முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 2 வது முறையாக அதிபர் டிரம்ப்பை சந்திக்கும் முகேஷ் அம்பானி!