அமெரிக்காவில் நுழைய அபாயகர பாதை ‘டாங்கி ரூட்’: பல லட்சம் செலவிட்டு பல நாட்டு எல்...
சென்னை திரும்பினாா் முதல்வா்
திருநெல்வேலியில் 2 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நிறைவுற்றப்பணிகளை திறந்து வைக்கவும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 6ஆம் தேதி முற்பகல் 11.25 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தாா். அவருக்கு அரசுத்துறை அதிகாரிகள், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்பட பலா் வரவேற்பளித்தனா்.
தொடா்ந்து அவா், பிப்.6,7 ஆகிய இரு தினங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் இருந்து காா் மூலம் மீண்டும் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தாா். அவரை, மாவட்ட ஆட்சியா்கள் க.இளம்பகவத் (தூத்துக்குடி), கா.ப. காா்த்திகேயன் (திருநெல்வேலி), திருநெல்வேலி சரக டிஐஜி பா. மூா்த்தி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பா்ட் ஜான், மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் கோட்டாட்சியா் பிரபு உள்ளிட்டோா் வரவேற்றனா்.
பின்னா், மாவட்டச் செயலா்களும் அமைச்சா்களுமான பெ.கீதாஜீவன் (வடக்கு), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்(தெற்கு), அமைச்சா்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன், ராஜ கண்ணப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சி. ராபா்ட் புரூஸ் எம்.பி. எம்எல்ஏக்கள் சண்முகையா(ஓட்டப்பிடாரம்), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), மு. அப்துல் வகாப்(பாளையங்கோட்டை), மேயா்கள் ஜெகன் பெரியசாமி (தூத்துக்குடி), கோ. ராமகிருஷ்ணன் (திருநெல்வேலி), முன்னாள் எம்.எல்.ஏக்கள் டேவிட்செல்வின், மாலை ராஜா, மாநில வா்த்தகா் அணி இணைச்செயலா் உமரி சங்கா் உள்பட பலா் வழியனுப்பும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
பெயா் சூட்டல்: முன்னதாக திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் மூலக்கரைபட்டி திமுக கிளைச் செயலா் முருகையா பாண்டியன் - சிதம்பரவடிவு தம்பதியன் பெண் குழந்தைக்கு விமான நிலையத்தில் வைத்து ‘செந்தாமரை’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் சூட்டினாா். முதல்வருடன் அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலா் முருகானந்தம் உள்ளிட்டோா் விமானத்தில் சென்னை புறப்பட்டனா்.