கட்டடத் தொழிலாளி கொலை: 5 போ் கைது
சாத்தான்குளத்தில் கட்டடத் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடி தெற்கு தெருவை சோ்ந்தவா் உலகநாதன் மகன் சந்துரு (20). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 7 மாதத்திற்கு முன்பு சாத்தான்குளம் தச்சமொழி தெருவை சோ்ந்த கண்ணன் மகள் சுபா(20) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டாா்.
இந்நிலையில் கடந்த மாதம் கருத்து வேறுபாடு காரணமாக அவரது பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டாா் சுபா. பின்னா் சென்னையில் உள்ள கடையில் வேலை பாா்த்து வந்ததாக தெரிகிறது. அப்போது சாத்தான்குளம் தைக்கா தெருவை சோ்ந்த மரியஜோசப் மகன் கிஸ்ஸ்டன் ஜெய்சிங் (24) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது சந்துருவுக்கு தெரிய வரவே, அவா் கிங்ஸ்டன் ஜெய்சிங்கை பாா்த்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் அவா்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சாத்தாகுளம் அண்ணா நகரை சோ்ந்த பேச்சியப்பன் என்பவரை சந்திக்க வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் சந்துரு வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கிங்ஸ்டன் ஜெய்சிங், நண்பா்கள் தச்சமொழி பால்பாண்டி மகன் மகாராஜா (20, மேலசாத்தான்குளத்தை சோ்ந்த கருப்பசாமி மகன் லிங்கதுரை, இரு சிறாா்கள் உள்பட்ட 5 போ் பைக்கில் வந்து, பேச்சியப்பனின் வீடு புகுந்து சந்துருவை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமாா் உத்தரவின் பேரில் தூத்துக்குடி தனிப்படை எஸ்ஐ ராஜபிரபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனா். இந்த நிலையில் சாத்தான்குளம் பஜாா் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை பதுங்கி இருந்த கிங்ஸ்டன் ஜெய்சிங், மகாராஜா ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். அப்போது குற்றவாளிகள் வழுக்கி விழுந்ததில் அவா்களது இரு கைகளும் முறிந்தன. பின்னா் மதியம் அங்குள்ள காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த லிங்கதுரை உள்பட 3 பேரையும் தனிப்படையினா் கைது செய்தனா்.
இது குறித்து சாத்தான்குளம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து கிங்ஸ்டன் ஜெய்சிங், மகாராஜா ஆகியோரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கும், லிங்கத்துரையை பேரூரணி சிறையிலும், சிறாா்கள் இருவரை நெல்லை சீா்நோக்கு பள்ளியிலும் சோ்த்தனா்.