சென்னை: மது போதையில் பெண் காவலரிடம் அத்துமீறிய நபர்; தர்ம அடி கொடுத்த மக்கள்; பின்னணி என்ன?
தென்சென்னையில் வசிப்பவர் ராணி (34) (பெயர் மாற்றம்). இவர், சென்னை போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாலை கோடம்பாக்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட ஆற்காடு சாலை பகுதியில் பெண் காவலர் ராணி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், அந்தப் பகுதியில் பூக்கடை நடத்தி வரும் பெண்ணின் மகளான சிறுமியிடம் ஆபாசமாகப் பேசியுள்ளார்.
அதைப் பெண் காவலர் ராணி தட்டிக் கேட்டிருக்கிறார். உடனே அந்த நபர், 'சிறுமியை விட நீ அழகாக இருக்கிறாய்' என்று பெண் காவலரின் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார். அதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர், அந்த நபரின் கையைத் தட்டி விட்டதோடு, 'ஏன் இப்படி அநாகரீகமாக நடந்து கொள்கிறாய்?' என்று கேட்டிருக்கிறார்.
அதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், பெண் காவலரின் முகத்தில் ஓங்கிக் குத்தியிருக்கிறார். இதில் அவருக்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. அதைப் பார்த்த பொதுமக்கள் அந்த நபரைச் சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்தனர். இதையடுத்து பெண் காவலர், காவல் கட்டுப்பாட்டறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அந்த நபரைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். காயமடைந்த பெண் காவலர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து சிறுமியிடமும் பெண் காவலரிடமும் அநாகரீகமாக நடந்த நபரிடம் போலீஸார் விசாரித்தனர்.
விசாரணையில் அவரின் பெயர் மோகன்ராஜ் (48) என்றும் அவர் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும், அவர் அரசு டாஸ்மாக் கடையில் சேல்ஸ் மேனாக வேலை பார்ப்பது தெரியவந்தது. தலைக்கேறிய மது போதையால் அவர் இப்படி நடந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணைக்குப் பிறகு மோகன்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.