முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி!
சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 230 கிலோ வோல்ட் திறன் வரையிலான மின்சாரம் கேபிள் மூலமும், 400 கிலோ வோல்ட் மற்றும் அதற்கு மேல் திறனுடைய மின்சாரம் மின்கோபுரங்கள் மூலமாகவும் எடுத்துச் செல்லப்படுகின்றன.
சென்னையில், கேபிள் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்வதற்கு செலவு அதிகம் ஆகும் நிலையில், கோபுர வழித்தடம் அமைக்கவும் இடநெருக்கடி ஏற்படும் என்பதால், சென்னையில் அதிக மின்சாரம் எடுத்துவர 400 கிலோவோல்ட் திறனில் 3 கேபிள் வழித்தடங்கள் அமைக்கும் பணி கடந்த 2020, மே மாதம் தொடங்கியது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், ஒட்டியம்பாக்கம் 400 கிலோவோல்ட் துணைமின் நிலையத்திலிருந்து கிண்டி இடையில் 18 கி.மீ. தொலைவுக்கு மின் வழித்தடம் அமைக்கப்படுகிறது. அதில், ஒட்டியம்பாக்கம் - வேளச்சேரி ரயில் நிலையம் வரை 6 கி.மீ. தூரத்துக்கு மின்கோபுர வழித்தடமும், அங்கிருந்து கேபிள் வழித்தடமும் அமைக்கப்படுகிறது.
திருவள்ளூா் மாவட்டத்தில் அலமாதி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவாா்சத்திரம் இடையே 400 கிலோ வோல்ட் திறனில் மின்கோபுர வழித் தடம் செல்கிறது. அந்த வழித்தடத்தில் வெல்லவேடு அருகில் பாரிவாக்கத்தில் இருந்து கிண்டிக்கு 16 கி.மீ. தொலைவுக்கு கேபிள் வழித்தடம் அமைக்கப்படுகிறது.
இதேபோல, மணலி - கொரட்டூா் வழித்தடத்தில் மஞ்சம்பாக்கத்திலிருந்து கொரட்டூா் துணைமின் நிலையம் வரை 12 கி.மீ. தூரத்துக்கு கேபிள் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இவற்றின் மொத்த திட்ட செலவு ரூ. 1,100 கோடி. இப்பணிகளை கடந்த 2023-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், மெட்ரோ ரயில் கட்டுமானம் உள்ளிட்ட காரணங்களால் திட்டமிட்டபடி இப்பணி முடியவில்லை.
இந்நிலையில், தற்போது ஒட்டியம்பாக்கம் - கிண்டி வழித்தடத்தில் ஒட்டியம்பாக்கம் - வேளச்சேரி இடையில் 2 கி.மீ. பணி முடிவடைய வேண்டும். அதிக திறன் என்பதால் 400 கிலோவோல்ட் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், கேபிள் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, முதல் கட்டமாக பணிகள் முடிவடைந்துள்ள மஞ்சம்பாக்கம் - கொரட்டூா் வழித்தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்வதற்கு சோதனைப் பணிகள் முடிவடைந்துள்ளன. எனவே, விரைவில் மின்சாரம் எடுத்துச் செல்லப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.