சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்: ஹார்திக் பாண்டியா
செய்வினை சந்தேகத்தில் கொலைவெறி தாக்குதல்! 70 வயது மூதாட்டி பலி!
ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டத்தில் செய்வினை வைத்ததாக சந்தேகித்து அடித்தும், கத்தியால் குத்தியும் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டி பலியானார்.
ராயகாடாவின் மண்கடஜோலா கிராமத்தைச் சேர்ந்த பாலு ஜோடியா மற்றும் பெஜு ஜானி ஆகிய இருவர் காலிமணி ஜானி (வயது 70) என்ற மூதாட்டியை கடந்த சனிக்கிழமை (ஜன.18) இரவு அவரது வீட்டில் இருந்து வெளியே வலுக்கட்டாயமாக இழுத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். மேலும், அவரை கத்தியாலும் குத்திவிட்டு அவரை அங்கேயே அவர்கள் விட்டு சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) காலை உயிருக்கு போராடிய அவரை கண்டுபிடித்த கிராமவாசிகள் ராயகாடா மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக பெர்ஹாம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஜன.21) அவர் பரிதாபமாக பலியானார்.
இதையும் படிக்க: ரூ.1 கோடி வெகுமதி: 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நக்சல் தலைவரைக் காட்டிக்கொடுத்த செல்ஃபி!
முன்னதாக, மூதாட்டியை தாக்கிய இருவரில் ஒருவரான பாலு என்பவரது மருமகளும், பேரனும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர். அவர்களது இறப்புக்கு காலிமணி செய்த செய்வினைதான் காரணம் என்று பாலுவின் குடும்பத்தினர் கொண்டிருந்த மூடநம்பிக்கையினால் அவர் மூதாட்டியை தாக்கி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த ராயகாடா காவல் துறையினர் பெஜு வை கைது செய்தனர். இருப்பினும், தப்பியோடிய முக்கியக் குற்றவாளியான பாலுவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.