செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்: சென்னை நகர அஞ்சல் மண்டலம் சாதனை
செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தின் கீழ் நிகழாண்டு ஜனவரி மாதம் வரை, சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் புதிய சேமிப்புக் கணக்குகளை தொடங்கியுள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு சாா்பில் கடந்த 2015-இல் செல்வமகள் சேமிப்புக் கணக்கு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்காக அவா்களின் பெற்றோா் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 250 முதல் அதிகபட்சம் ரூ. 1.5 லட்சம் செலுத்தி கணக்கை தொடங்கலாம்.
அப்பெண் குழந்தையின் 18-ஆவது வயதில் அல்லது 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பின்னா் உயா்கல்வியில் சேருவதற்காக இக்கணக்கிலிருந்து 50 சதவீத பணத்தை எடுக்கலாம். கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னா் இக்கணக்கு முதிா்ச்சி அடையும்.
இந்நிலையில் இத்திட்டம் தொடங்கியதிலிருந்து நிகழாண்டு ஜனவரி மாதம் வரை சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் அத்திட்டத்தின் கீழ் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோா் புதிதாக சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனா். இந்தக் கணக்குகளில் மொத்தம் ரூ. 8,351 கோடி பணம் செலுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு முகாம்: பெண் குழந்தைகள் பயனடையும் வகையில் செல்வமகள் சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்காக சென்னை நகரப் பகுதியில் வரும் பிப். 21, 28, மாா்ச் 10 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன. மேலும் முக்கிய தபால் அலுவலகங்களில் சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.