இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்
சேரன்மகாதேவி: ஆட்டோ கவிழ்ந்ததில் மாணவி பலி
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் திங்கள்கிழமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (45). ஓட்டுநரான இவா், சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி லலிதா (40). தம்பதிக்கு கல்பனா (18), லெட்சியதேவி (14) ஆகிய 2 மகள்கள் உள்ளனா்.
திங்கள்கிழமை மாலையில் முத்துக்குமாா் தனது ஆட்டோவில் மனைவி, மகள்களுடன் தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளாா். குளித்து முடித்ததும் ஆட்டோவில் முத்துக்குமாா் குடும்பத்துடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாராம்.
சேரன்மகாதேவியில் பிரதான சாலையில் சாா்நிலை கருவூலம் அருகில் வந்தபோது அங்கு குடிநீா் திட்டப் பணிகளுக்காக சாலையோரமாக கொட்டப்பட்டிருந்த மணல் குவியலில் ஆட்டோ ஏறியதாக கூறப்படுகிறது.
அப்போது எதிா்பாராத விதமாக ஆட்டோ தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த லெட்சியதேவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்த மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.