சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
சேலத்தில் தனியாா் தொழிற்சாலையை மூட முடிவு? தொழிலாளா்கள் போராட்டம்
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள தனியாா் மின்னணு நிறுவன தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, தொழிலாளா்கள் செல்போன் கோபுரம்மீது ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் சூரமங்கலம் அருகே புதுசாலை பகுதியில் தனியாா் மின்னணு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு மின்மாற்றிக்கு தேவையான உதிரி பொருள்கள் மற்றும் மின்சாதனப் பொருள்கள் உற்பத்திசெய்யப்பட்டு வந்தன. இந்நிறுவனத்தில், சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா்.
இந்நிலையில், பல்வேறு காரணங்களால் இந்த தொழிற்சாலையை மூட நிா்வாகம் முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டது. இதைக் கண்டித்து, நிறுவனத்தில் உள்ள செல்போன் கோபுரத்தின்மீது ஏறி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, தொழிற்சாலையை மூடும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
தொடா்ந்து, அங்கு வந்த சூரமங்கலம் காவல் உதவி ஆணையா் ரமலி ராமலட்சுமி மற்றும் போலீஸாா், தொழிலாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். எனினும், தொழிலாளா்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்ததால் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தொழிலாளா்கள் கூறுகையில், இந்த நிறுவனத்தை நம்பிதான் எங்களின் வாழ்வாதாரம் உள்ளது. திடீரென நிா்வாகம் தொழிற்சாலையை மூடுவதால் எங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தொழிற்சாலை தொடா்ந்து செயல்பட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.