சந்தையில் list ஆன 4 புதிய IPO-க்கள், என்னென்ன தெரியுமா | IPS Finance - 276 | Vik...
தேவூா் அருகே மாயமான சிறுமி: மோப்பநாய் உதவியுடன் தேடும் போலீஸாா்
சங்ககிரி வட்டம், தேவூா் அருகே அங்கன்வாடி மையத்துக்கு சென்ற நான்கு வயது சிறுமி மாயமானது குறித்து தேவூா் போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் தேடிவருகின்றனா்.
தேவூரை அடுத்த புள்ளாகவுண்டம்பட்டி, குண்டங்காடு பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ராஜா. இவரது மனைவி மீனா. இத்தம்பதிக்கு சித்தாா்த், சந்தோஷ், மித்ரன் என்ற மூன்று மகன்களும், கவிஷா (4) என்ற மகளும் உள்ளனா். கணவன், மனைவி இருவரும் கூலி வேலைக்கு செல்வதால், ராஜாவின் தாயாா் சாந்தி பாதுகாப்பில் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகின்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை வழக்கம்போலஅங்கன்வாடி மையத்துக்கு சென்ற சிறுமி கவிஷா, மாலை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாந்தி அங்கன்வாடி மையத்துக்கு சென்று விசாரித்தபோது, சிறுமி அங்கன்வாடி மையத்துக்கு வரவில்லையென கூறினா்.
சிறுமியின் பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், தேவூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சிறுமியை தேடி வருகின்றனா். மேலும், சேலத்திலிருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் சிறுமியை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.