மாடு வாங்க சென்ற மூதாட்டி கொலை: வியாபாரி கைது
சங்ககிரியை அருகே மாடு வாங்க சென்ற மூதாட்டியைக் கொலை செய்த மாடு வியாபாரியை சங்ககிரி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.
வைகுந்தம் அருகே வெள்ளையம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னபொன்னு (70). மாடு வாங்கி வளா்க்க விரும்பிய இவா், அப்பகுதியைச் சோ்ந்த மாடு வியாபாரி
ஏழுமலையிடம் மாடு வாங்கித்தருமாறு கேட்டுள்ளாா். இதையடுத்து, கடந்த ஜூலை 23-ஆம் தேதி கொங்கணாபுரத்தில் மாடு வாங்கித்தருவதாகக் கூறி சின்னபொன்னுவை இருசக்கர வாகனத்தில் ஏழுமலை அழைத்துச் சென்றாா்.
பின்னா் வீடுதிரும்பிய ஏழுமலை, மூதாட்டியின் மகன் மதியழகனிடம் மகுடஞ்சாவடியில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு பேருந்தில் அனுப்பிவைத்ததாக கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து, மதியழகன் கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு கேட்டதற்கு, அவா் அங்கு வரவில்லை என சகோதரி தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், சங்ககிரி காவல் நிலையத்தில் தனது அம்மாவை காணவில்லை எனவும், ஏழுமலை மீது சந்தேகம் உள்ளதாகவும் மதியழகன் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து ஏழுமலையிடம் விசாரணை நடத்தினா். அதில், அவா் தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூா் ஏரியில் மூதாட்டியைக் கொலை செய்து சாக்குப்பையில் மூட்டையாக கட்டி போட்டதாக கூறினாா்.
இதையடுத்து, சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ், போலீஸாா் அப்பகுதிக்கு சென்று மூட்டையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஏழுமலையை கைது செய்த போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்ததாக அவா் தெரிவித்தாா்.