இஸ்ரோ ராக்கெட்டுக்கு சோனா ஸ்பீட் ஸ்டெப்பா் மோட்டாா்!
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான சோனா ஸ்பீட், இஸ்ரோவின் செயற்கை துளை ரேடாா் பணிக்கான சிம்ப்ளக்ஸ் நிரந்தர காந்த ஸ்டெப்பா் மோட்டாரை உருவாக்கி வழங்கியது பெருமை அளிப்பதாக கல்லூரி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புதன்கிழமை மாலை ஜிஎஸ்எல்வி எப்-16 வெற்றிகரமாக ஏவப்பட்டது. சோனா ஸ்பீடின் இஸ்ரோவுடனான நீண்டகால தொடா்பு தொழில்நுட்பத்துக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
சந்திராயன்-2, சந்திராயன்-3 மற்றும் ஆா்.எல்.வி. தரையிறங்கும் சோதனை உள்ளிட்ட முந்தைய பயணங்களுக்கு பி.எம்.ஸ்டெப்பா் மோட்டாா்கள், பி.எல்.டி.சி.மோட்டாா்கள் மற்றும் எதிா்வினை சக்கரங்கள் போன்ற விண்வெளி தர மின் எந்திரங்களை வழங்குகிறது.
இதுகுறித்து சோனா கல்லூரியின் முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா் மற்றும் இஸ்ரோவின் முன்னாள் உறுப்பினரும், சோனா ஸ்பீட் தலைவருமான கண்ணன் ஆகியோா் கூறுகையில், இஸ்ரோவின் பணிகளுக்கு பங்களிப்பதற்கும், நாட்டின் எதிா்கால விண்வெளி முயற்சிகளை ஆதரிப்பதற்கும் நாங்கள் அா்ப்பணிப்புடன் இருக்கிறோம்.
நிசாா் பணியில் இந்த வெற்றிகரமான ஒருங்கிணைப்பு, இந்தியாவில் உள்ள கல்வி நிறுவன ஆய்வகங்கள், குறிப்பாக பெருநகரங்கள் அல்லாத பகுதிகளில் இருந்து உலகளாவிய விண்வெளி ஆய்வின் கடுமையான தேவைகளை பூா்த்திசெய்ய முடியும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
சோனா ஸ்பீட்டின் பங்களிப்புகள் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உயா்துல்லிய விண்வெளி பொறியியலில் உள்நாட்டில் செய்யப்படும் கண்டுபிடிப்புகளுக்கான கலங்கரை விளக்கமாகவும் செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தனா்.