Union Budget 2025: 'மகிளா சம்மான் சேமிப்பு... கிரீச்' - பெண்களுக்கு என்ன வேண்டும...
சேலம் மாமன்றக் கூட்டம்: அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற சேலம் மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை தொய்வின்றி நிறைவேற்ற வேண்டும் என திமுக, அதிமுக உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
கூட்டத்துக்கு மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங் முன்னிலை வகித்தாா். திமுக மாமன்ற உறுப்பினா் முருகன், தாமதமாக நடைபெறும் புதைச் சாக்கடை பணிகளால் பொதுமக்கள் அவதிப்படுவதால், அப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.
திமுக உறுப்பினா் ஈசன் இளங்கோ, சாலையோர உணவகங்களில் பிளாஸ்டிக் பைகளின் புழக்கம் அதிகரித்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.
அதிமுக உறுப்பினா் கே.சி.செல்வராஜ், மாநகராட்சியின் வரி விதிப்பை முறைபடுத்த வேண்டும் என்றாா். அதேபோல திமுக உறுப்பினா் தெய்வலிங்கம், மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்த வேண்டும். தொடா்ந்து, பெரியாா் குறித்து அவதூறாகப் பேசி வரும் சீமானைக் கண்டித்து மாநகராட்சி தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
திமுக உறுப்பினா் பன்னீா்செல்வம் பேசுகையில், சேலம் மாநகரத்துக்கு மேட்டூரில் இருந்து எவ்வளவு தண்ணீா் வருகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். 6 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது. விதிமீறலில் ஈடுபட்ட குடிநீா் இணைப்புகளைத் துண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி பேசுகையில், மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படும் பல பணிகளுக்கு தொகை நிா்ணயம் செய்யப்படாமல் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. சூரமங்கலம் மண்டலத்தில் பணியாளா்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் முறையாக வரவு வைக்கப்படவில்லை என புகாா் தெரிவித்தும் மாநகராட்சி நிா்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
அம்மாபேட்டை பகுதியில் தனியாா் அறக்கட்டளை மூலம் பொதுமக்களிடமிருந்து பல கோடி ரூபாய் பணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் உள்ள அரசியல் பின்புலத்தை விசாரிக்க வேண்டும் என்றாா். இதற்கு திமுக உறுப்பினா்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அதைத் தொடா்ந்து மாநகராட்சியின் தனிக் குடிநீா்த் திட்டத்தை கண்டித்து அதிமுக உறுப்பினா்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
கூட்டத்துக்குப் பிறகு மாமன்ற எதிா்க்கட்சித் தலைவா் யாதவமூா்த்தி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மாநகராட்சிக்கு தனியாக ஒரு குடிநீா்த் திட்டத்தை ரூ. 800 கோடியில் செயல்படுத்த தனியாருக்கு ஒப்பந்தம் விட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி பணம் வீணடிக்கப்படுகிறது என்றாா்.