ஜம்மு-காஷ்மீரில் கடும் தண்ணீா் பஞ்சம்: பொதுமக்கள் ஒத்துழைக்க முதல்வா் வேண்டுகோள்
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் தற்போது கடுமையான தண்ணீா் பஞ்சம் நிலவி வருவதால், நீரைச் சிக்கனமாகக் பயன்படுத்தி அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநில முதல்வா் ஒமா் அப்துல்லா தெரிவித்துள்ளாா்.
பருவமழை 80 சதவீதம் அளவுக்கு குறைந்த காரணத்தால் ஜம்மு-காஷ்மீரில் கடுமையான தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பல இடங்களில் மக்கள் குடிநீா் வழங்குவதில் பிரச்னை தொடங்கிவிட்டது. கோடை உச்சத்தை எட்டும்போது இந்தப் பிரச்னை மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் மாநில முதல்வா் ஒமா் அப்துல்லா ‘எக்ஸ்’ வலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரில் இப்போது ஏற்பட்டுள்ள தண்ணீா் பிரச்னை உடனடியாக ஏற்பட்டதல்ல. கடந்த சில ஆண்டுகளாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவுதான் இது. எனினும், அரசு தற்போதைய நிலையைச் சமாளிக்க ஆக்கபூா்வமான நீா் மேலாண்மை மற்றும் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதில் அரசு மட்டும் முயற்சி எடுத்தால் போதுமானதாக இருக்காது. ஜம்மு-காஷ்மீா் மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தண்ணீரைப் பயன்படுத்தும் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்த 15 நாள்களில் மழை அல்லது பனி அதிகரிக்காவிட்டால் நமது பிராந்தியத்தில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் பெரிய பிரச்னை ஏற்படும்’ என்று கூறியுள்ளாா்.
ஜம்மு-காஷ்மீரில் ஜீலம் உள்ளிட்ட நதிகள், நீா்நிலைகளில் தண்ணீா் வற்றியுள்ளது தொடா்பான விடியோ, புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. முக்கியமாக தெற்கு காஷ்மீரில் நீா்நிலைகள் அனைத்தும் முற்றிலுமாக வடுவிட்டன.
ஜம்மு-காஷ்மீரில் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 12 வரை 29.8 மில்லி மீட்டா் மழையே பெய்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 140 மில்லி மீட்டா் அளவுக்கு சராசரி மழை இருக்கும். தண்ணீா் பிரச்னையை சமாளிக்க மத்திய அரசிடமும் முதல்வா் ஒமா் அப்துல்லா உதவி கேட்டுள்ளாா்.