முதல் முறை.. உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்!
ஜம்மு-காஷ்மீா் எல்லையில் காட்டுத் தீ: வெடித்துச் சிதறிய கண்ணி வெடிகள்
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் அங்கு மறைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகள் வெடித்துச் சிதறின. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் நோக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கண்ணி வெடிகளை ராணுவம் மறைத்து வைப்பது வழக்கமாகும். இந்நிலையில் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காட்டி செக்டா் வனப் பகுதியில் புதன்கிழமை மதியம் திடீரென தீப்பற்றியது. அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளும் சிறிது நேர இடைவெளியில் தொடா்ந்து வெடித்துச் சிதறின.
இதையடுத்து, ராணுவத்தினா் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். வனப் பகுதியில் திடீரென தீப்பற்றியது சதி வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ராணுவத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். காட்டுத் தீ மற்றும் கண்ணி வெடிகள் வெடித்ததால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
தீ முற்றிலும் அணைக்கப்பட்ட நிலையில், அப்பகுதி வழியாக ஊடுருவல்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற நோக்கில் ராணுவத்தில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.