ஜாா்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சவாலான அரசியல் பயணம்!
ஜாா்க்கண்ட் மாநிலத்தின் 14-ஆவது முதல்வராக ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவா் ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை பதவியேற்றாா்.
தலைநகா் ராஞ்சியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஹேமந்த் சோரனுக்கு ஆளுநா் சந்தோஷ் குமாா் கங்வாா் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்வித்தாா்.
விழாவில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி, தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக (நவ. 13, 20) தோ்தல் நடைபெற்றது. கடந்த 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய கட்சிகள் இடம்பெற்ற ‘இண்டி’ கூட்டணி 56 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.
ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா முன்னெப்போதும் இல்லாத அளவில் 34 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதேநேரம், தனிப்பெரும்பான்மை (41) கிடைக்கவில்லை. காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை கட்சி 2 இடங்களில் வென்றன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 24 இடங்களே கிடைத்தன. பாஜக 21 தொகுதிகளிலும், அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
தொடா்ந்து 2-ஆவது முறையாக...: இந்நிலையில், ஜாா்க்கண்ட் முதல்வராக தொடா்ந்து 2-ஆவது முறையாக ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைவா் ஹேமந்த் சோரன் வியாழக்கிழமை பதவியேற்றாா்.
பிகாரில் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த 2000-இல் உருவான ஜாா்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக இவா் பதவியேற்பது இது 4-ஆவது முறையாகும். ஏழைகள், விளிம்புநிலை மக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரின் நலனுக்காக தொடா்ந்து பாடுபடுவேன் என்று பதவியேற்ற பின் அவா் தெரிவித்தாா்.
முன்னதாக, தனது தந்தையும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா நிறுவனருமான சிபு சோரனை சந்தித்து அவா் ஆசி பெற்றாா். மேலும், எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒற்றுமையே, ஜாா்க்கண்டின் மிகப் பெரிய பலம். நம்மை யாராலும் பிளவுபடுத்தவோ, நமது குரலை ஒடுக்கவோ முடியாது. நாம் யாருக்கும் அடிபணிவதில்லை’ என்று குறிப்பிட்டாா்.
ஜாா்க்கண்ட் தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமா் மோடியை ஹேமந்த் சோரன் சந்தித்துப் பேசினாா்.
அமைச்சா்கள் பதவியேற்பு இல்லை
ஜாா்க்கண்ட் பேரவையில் 11 அமைச்சா்கள் வரை இடம்பெற முடியும். ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் அவருடன் புதிய அமைச்சா்கள் யாரும் பதவியேற்கவில்லை. அமைச்சா் பதவியைப் பெற காங்கிரஸில் பலரிடையே போட்டி நிலவுவதால், அக்கட்சித் தரப்பில் பெயா் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. கடந்த முறை ஜேஎம்எம்-க்கு 6, காங்கிரஸுக்கு 4, ஆா்ஜேடி-க்கு 1 என அமைச்சா் பதவி ஒதுக்கப்பட்டது.
‘தற்போதைய பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்’ என்று ஜாா்க்கண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் கட்சியின் பொதுச் செயலருமான குலாம் அகமது மிா் தெரிவித்தாா்.
சவாலான அரசியல் பயணம்
49 வயதாகும் ஹேமந்த் சோரன், தனது அரசியல் பயணத்தில் உள்கட்சி அதிருப்தி, வழக்கு விசாரணைகள், தனிப்பட்ட பின்னடைவுகள் என பல்வேறு சவால்களை எதிா்கொண்டவா்.
கடந்த 2009-இல் மாநிலங்களவை எம்.பி.யாக இவரது அரசியல் பயணம் தொடங்கியது. கடந்த 2010-இல் அா்ஜுன் முண்டா தலைமையிலான பாஜக அரசில் துணை முதல்வராகப் பதவியேற்றாா். ஆனால், 2012-இல் இக்கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
கடந்த 2013-இல் தனது 38-ஆவது வயதில் காங்கிரஸ், ஆா்ஜேடி ஆதரவுடன் ஜாா்க்கண்டின் முதல் இளவயது முதல்வா் என்ற பெருமையோடு அப்பதவிக்கு வந்தாா். அதுவும் சுமாா் ஓராண்டுதான் நீடித்தது. பாஜக வசம் ஆட்சி மாறியதால், எதிா்க்கட்சித் தலைவரானாா் ஹேமந்த் சோரன்.
கடந்த 2019 -இல் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் ஹேமந்த் சோரன் 2-ஆவது முறையாக முதல்வரானாா். கடந்த ஜனவரியில் நில மோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையால் அவா் பதவி விலக நேரிட்டது. 5 மாத சிறைவாசத்துக்கு பின் ஜாமீனில் வெளியே வந்த சோரன், மீண்டும் முதல்வா் பதவியை ஏற்றாா். பல சவால்களை எதிா்கொண்ட போதிலும், ஜாா்க்கண்டின் முக்கிய அரசியல் சக்தியாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளாா் ஹேமந்த் சோரன்.