என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் -நிர்மலா சீதாராமன்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தைத் தொடர்ந்து, மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகித ஜிஎஸ்டி முறையை 5%,18% ஆகிய இரு விகிதங்களாக குறைக்கவும் புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இரு விகித ஜிஎஸ்டி முறை வரும் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்திருப்பதாவது, “பிரதமர் மோடி எப்போதுமே மக்கள் சார்பு சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்துபவர், ஆகவே, இதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகளை அவர் தொடருவார்.
ஜிஎஸ்டி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாட்டை தவறாக வழிநடத்துகின்றன. ஜிஎஸ்டியில் 4 விகித முறை கொண்டுவந்தது பாஜகவின் தனிப்பட்ட முடிவு அல்ல, அதற்கான கமிட்டியால் எடுக்கப்பட்ட முடிவு. ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மூலமாக சாமானிய மனிதனுக்கு பெருநிம்மதி ஏற்படுத்த அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து முன்வந்துள்ளன.
இந்திய நாட்டுக்கு இன்னும் திறன் வாய்ந்த எதிர்க்கட்சி இருந்தால் பொருத்தமாக இருக்கும். எதிர் தரப்பு தலைவர்கள் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகளைக் குறித்து சுமத்தும் விமர்சனங்கள் தவறான தகவல்களின் அடிப்படையிலானது” என்றார்.