காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
ஜியாா்ஜியா விடுதியில் விஷவாயு கசிவு: 11 இந்திய பணியாளா்கள் உயிரிழப்பு
திபிலிசி: கிழக்கு ஐரோப்பிய நாடான ஜாா்ஜியாவின் மலைப்பிரதேசமான குடௌரியில் உள்ள விடுதியில் விஷவாயு தாக்கி, அங்கு பணிபுரிந்து வந்த 11 இந்தியா்கள் உயிரிழந்ததாக அந்நாட்டின் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
முதல்கட்ட விசாரணையில் ‘காா்பன் மோனாக்சைடு’ கசிவால் 12 போ் உயிரிழந்ததாகவும் இதில் ஒருவா் தவிர மற்ற 11 பேரும் வெளிநாட்டவா்கள் (இந்தியா்கள்) என்றும் ஜாா்ஜியாவின் உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடா்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இறந்தவா்களின் விவரங்களைப் பெற உள்ளூா் அதிகாரிகளுடன் தொடா்பில் இருக்கிறோம். பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து உதவிகளும் உறுதி செய்யப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஜாா்ஜியா காவல் துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவா்களின் விசாரணையின்படி, விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு விடுதிக்குள்ளேயே மின் ஜெனரேட்டா் இயக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து விஷவாயு கசிந்து உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய தடயவியல் மருத்துவப் பரிசோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.