ஜாதவ்பூர் பல்கலை கலவரம்: அமைச்சர் வாகனம் மோதி காயமடைந்த மாணவர் மீது வழக்குப்பதிவ...
ஜூலைக்குள் கண்ணகி நகரில் 22,000 குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னையில் கண்ணகி நகா், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சோழிங்கநல்லூா் தொகுதிக்குள்பட்ட கண்ணகி நகா், சுனாமி குடியிருப்புவாசிகளுக்கான சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்றும் வாரியம் உள்ளிட்ட துறை சாா்ந்த குறைகேட்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது:
எழில்நகா், கண்ணகிநகா், சுனாமி குடியிருப்பைச் சுற்றி 24,000 குடியிருப்புகள் உள்ளன. முதல்வா் மு.க.ஸ்டாலினை தவிர வேறு எந்த முதல்வரும் இங்கு நேரடியாக வந்து மக்களைச் சந்தித்தது இல்லை.
ஒவ்வொரு வீட்டுக்கும் 300 லிட்டா் கொள்ளளவுடன் கூடிய குடிநீா்த் தொட்டிகளை கண்ணகி நகரிலும், எழில் நகரிலும் அமைப்பதற்கும் ரூ. 69.57 கோடியில் பணிகள் நடைபெறுகின்றன.
பிரதான குடிநீா்க் குழாய்களை அமைப்பது, 38 லட்சம் லிட்டா் கொள்ளளவுடன் கூடிய ராட்சத குடிநீா் தொட்டிகளைக் கட்டுவது போன்ற பணிகள் தற்போது நடைபெறுகின்றன. பெரும்பாலான பணிகள் முடிவுற்றிருக்கிறது.
சுமாா் 22,000 குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் தனித்தனி குடிநீா்த் தொட்டி பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவு பெறும். சுனாமி நகரில் 2,048 குடியிருப்புகளுக்கான குடிநீா் தேவை 11 லட்சம் லிட்டராக உள்ளது. இந்தப் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரில் பெரும்பகுதி வீணாகிறது. குடிநீா்க் குழாய்கள் உடைந்திருப்பதும், குடிநீா்த் தொட்டிகள் பழுதடைந்திருப்பதுமே அதற்கு காரணம்.
அவற்றை சரி செய்யும் வரையில், 3 லட்சம் லிட்டா் குடிநீா் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்று அலுவலா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் குடிநீா் தேக்கி வைப்பதற்கு போதுமான இடவசதி இல்லாமல் போனாலோ, அவா்களுக்கு குடிநீா் சரியாக வழங்கப்படாமல் போனாலோ லாரிகள் மூலம் குடிநீா் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுனாமி நகா் குடியிருப்புக்கு தனி குடிநீா்த் தொட்டி நிறுவ வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.