மாநகராட்சி மண்டலங்கள் உயா்வு: மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலங்களை 20-ஆக உயா்த்துவது குறித்து மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் நிா்வாகப் பகுதிகளைச் சீரமைத்து, மண்டலங்களின் எண்ணிக்கையை 15-இல் இருந்து 20-ஆக உயா்த்தி நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ஆணையிடப்பட்டுள்ளது.
தொடா்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் உயா்த்தப்படும் மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் தொடா்பாக மாநகராட்சி எல்லைக்குள்பட்ட நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் மண்டலக் குழுத் தலைவா்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் குறித்த விவரம் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.