ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
ஜெய்ஸ்வால் அவுட் சர்ச்சை: இரு அணிகளின் கேப்டன்களும் பேசியது என்ன?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சர்ச்சைக்குரிய விதத்தில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தது குறித்து இரண்டு அணிகளின் கேப்டன்களும் பேசியுள்ளனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு கடைசி நாளில் 340 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின், ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பந்த் இடையிலான பார்ட்னர்ஷிப் போட்டியை டிரா செய்யும் நம்பிக்கையை ரசிகர்களுக்கு அளித்தது. இருப்பினும், ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சில் இந்திய அணி 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தோல்வியைத் தழுவியது.
இதையும் படிக்க: ரிஷப் பந்த் இதனை புரிந்துகொள்ள வேண்டும்; எதைக் கூறுகிறார் ரோஹித் சர்மா?
ஜெய்ஸ்வால் அவுட் சர்ச்சை
இந்தப் போட்டியில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த விதம் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. கள நடுவர் ஜெய்ஸ்வாலுக்கு அவுட் கொடுக்க மறுக்க, மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார். ஸ்னிக்கோ மீட்டரில் எந்தவொரு அதிர்வும் காட்டவில்லை. இருப்பினும், ஜெய்ஸ்வால் பேட்டில் அல்லது கையுறையில் பந்து பட்டு விலகிச் செல்வதை அடிப்படையாகக் கொண்டு மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்தார்.
இரண்டு அணிகளின் கேப்டன்களும் கூறியதென்ன?
யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்ச்சைக்குரிய விதத்தில் ஆட்டமிழந்தையடுத்து, இது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இருவரும் பேசியுள்ளனர்.
இதையும் படிக்க: மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன்; தோல்விக்குப் பிறகு ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மா
ஸ்னிக்கோ மீட்டர் தொழில்நுட்பத்தில் பந்து பேட்டில் அல்லது கையுறைகளில் பட்டதற்கான அதிர்வைக் காட்டாததற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், வெறும் கண்களில் பார்க்கும்போது, பந்து பேட்டிலோ அல்லது கையுறையிலோ பட்டது போன்று தெரிகிறது. களநடுவர்கள் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஜெய்ஸ்வால் பந்தினை தொட்டுள்ளார் என்று நான் நினைக்கிறேன்.
தொழில்நுட்பம் எப்போதும் 100 சதவிகிதம் சரியாக இருப்பதில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் நாம் ஆழமாக செல்ல வேண்டாம் என நினைக்கிறேன். இந்திய அணி அதிகமுறை இந்த தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படுகிறது. எங்களுக்கு இந்த விஷயத்தில் அதிர்ஷ்டமில்லை.
இதையும் படிக்க: இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து!
பாட் கம்மின்ஸ்
யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேட்டில் பந்து பட்டது மிகவும் தெளிவாக தெரிந்தது. எங்களுக்கு சத்தமும் கேட்டது. மேல்முறையீடு செய்ததில் பந்து பேட்டில் பட்டு விலகிச் செல்வதை பார்க்க முடிந்தது. அதிலிருந்து, அவர் பேட்டில் பந்து பட்டது உறுதியாகிறது. நாங்கள் கள நடுவர் முடிவுக்கு எதிராக உடனடியாக ரிவ்யூ செய்தவுடன், ஜெய்ஸ்வால் அவரது தலையை கீழே தொங்கவிட்டார். அதிலிருந்து அவரது பேட்டில் பந்து பட்ட ஏமாற்றத்தை அவர் வெளிப்படுத்தினார். பெரிய திரைகளில் நீங்களும் பந்து பேட்டில் படுவதை பார்த்திருப்பீர்கள். அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் யாருக்கும் 100 சதவிகிதம் நம்பிக்கை இருப்பதாக நான் நினைக்கவில்லை.