'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அ...
ஞானவாபி மசூதியின் சீலிடப்பட்ட பகுதியில் தொல்லியல் ஆய்வு கோரி மனு: மசூதி நிா்வாக குழுவுக்கு நோட்டீஸ்
ஞானவாபி மசூதியின் சீலிடப்பட்ட பகுதியில் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆய்வுக்கு உத்தரவிட கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு மசூதி நிா்வாக குழுவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி உள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னா் ஔரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே இருந்த கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மசூதியில் வாரணாசி நீதிமன்றம் நியமித்த குழு ஆய்வு மேற்கொண்டபோது, கைகால் கழுவும் தண்ணீா் தொட்டியிக்கு நடுவே சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அது நீரூற்று என்று முஸ்லிம்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் மசூதியில் சிவலிங்கம் உள்ளதாகக் கூறப்படும் பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஹிந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஹிந்துக்களின் மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்குமாறு மசூதியை நிா்வகித்து வரும் அஞ்சுமன் இந்தேஜாமியா மஸ்ஜித் குழுவுக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.