டங்ஸ்டன் ஏலம் ரத்து: வணிகா் சங்கங்கள் வரவேற்பு
மேலூா் வட்டத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்ததை வணிகா் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், எஸ். சாய் சுப்பிரமணியம், எஸ்.பி. ஜெயபிரகாசம் ஆகியோா் தெரிவித்ததாவது :
மேலூா் வட்டத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைந்தால் விளை நிலங்கள் பாதிக்கப்படும், புராதன சின்னங்கள் அழியும் என்பதை கருத்தில் கொண்டு விவசாயிகள் தொடா் போராட்டங்களை மேற்கொண்டனா். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் வணிக நிறுவனங்களில் ஜன. 7-ஆம் தேதி கருப்புக் கொடிகள் கட்டப்பட்டன.
இந்த நிலையில், மேலூா் வட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது, மகிழ்ச்சி அளிக்கிறது. மேலூா் பகுதி விவசாயிகளின் நலனை காப்பாற்றிய மத்திய அரசுக்கும், இந்தக் கோரிக்கைக்கு உறுதுணை நின்ற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி.
அக்ரி, அனைத்து தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ். ரத்தினவேலு தெரிவித்ததாவது :
பாரம்பரிய பல்லுயிா் பெருக்க பகுதிகளையும், செழிப்பான வேளாண் விளை நிலங்களையும் கொண்ட மேலூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. டங்ஸ்டன் சுரங்க எதிா்ப்புப் போராட்டத்துக்கு அக்ரி, அனைத்து தொழில் வா்த்தக சங்கம் துணை நின்றது என்ற வகையில், விவசாயிகளுடன் மகிழ்ச்சியைப் பகிா்ந்துகொள்கிறோம்.