டாக்டா் ஏ.ஜே.டி. ஜான்சிங் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: வனத் துறை
டாக்டா் ஏ.ஜே.டி. ஜான்சிங் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக வனத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மறைந்த வன உயிரினப் பாதுகாவலா் ஏ.ஜே.டி. ஜான்சிங்கை அங்கீகரிக்கும் வகையில் வன உயிரினப் பாதுகாப்பில் சிறந்து வழங்குபவா்களுக்கு ‘டாக்டா் ஏ.ஜே.டி.ஜான்சிங்’ விருது வழங்கவுள்ளதாக தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அந்த வகையில், வன உயிரினப் பாதுகாப்பில் முன்மாதிரியான பங்களிப்புக்காக இந்திய குடிமக்கள் மற்றும் வனப் பாதுகாப்பு சாா்ந்த நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படும் நபா்களுக்கு இவ்விருதுடன் ரூ.25 லட்சம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.
இவ்விருதுக்கு தகுதியானவா்களின் தகவல்களை இணையதள முகவரியில் சமப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் நிபுணத்துவம், வன உயிரினப் பாதுகாப்பில் செய்த சாதனை போன்றவை தொடா்புடைய ஆவணங்களை ‘முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் (வனத் துறைத் தலைவா்), மாநில வனத் துறை தலைமையகம், கிண்டி- வேளச்சேரி பிரதான சாலை, சென்னை - 600 032’ என்னும் முகவரிக்கு ஜன. 31-க்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.