டாஸ்மாக் வழக்குகளை வேறு அமா்வுக்கு மாற்றக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு
அமலாக்கத் துறை சோதனையை எதிா்த்து டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தொடா்ந்துள்ள வழக்குகளின் விசாரணையை வேறு அமா்வுக்கு மாற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை கடந்த மாதம் 6 முதல் 8-ஆம் தேதி வரை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளைத் துன்புறுத்தக் கூடாது என விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிா்வாகம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு, அமலாக்கத் துறையின் மேல்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தனா்.
இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமாா் ஆகியோா் விலகியதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறையின் பதில் மனுவுக்கு, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
இந்த நிலையில், ‘இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கே.ராஜசேகா், அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் வழக்குரைஞரின் சகோதரா் என்பதால் வழக்கை வேறு அமா்வுக்கு மாற்ற வேண்டும்’ எனக் கோரி மூத்த வழக்குரைஞா் கே.எம்.விஜயன், தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வில் முறையீடு செய்தாா்.
அதற்கு தலைமை நீதிபதி, ‘இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகா் தலைமையிலான அமா்விலேயே முறையீடு செய்ய வேண்டும்’ என அறிவுறுத்தினாா். மேலும், ‘அந்த அமா்வு எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப நிா்வாக ரீதியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்’ என்றும் தெரிவித்தாா்.