டிவி நடிகர் சங்கத் தேர்தல்: வேட்பு மனு நிராகரிப்பு; போட்டியிடும் வாய்ப்பை இழந்த ரவீனா; பின்னணி என்ன?
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த நடிகை ரவீனாவின் வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 2,000 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கவிருக்கிறது.
தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன் தலைமையிலான அணி மீண்டும் போட்டியிடுகிறது. தவிர பரத் தலைமையில் ஒரு அணி, தினேஷ் தலைமையில் ஒரு அணி என மொத்தம் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.
ஆர்த்தி சுயேட்சையாக தலைவர் பதவிக்கும் அவரது கணவர் கணேஷ்கர் சுயேட்சையாக துணைத் தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

சிவன் அணியைச் சேர்ந்தவரும் சங்கத்தின் தற்போதைய செயலாளருமான போஸ் வெங்கட் முதலில் போட்டியிடுவதாகச் சொல்லியிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் என்ன நடந்ததோ தெரியவில்லை, அவர் போட்டியிலிருந்து ஒதுங்கி விட, அவருக்குப் பதில் நிரோஷா செயலாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
கடந்த திங்கள் கிழமை தொடங்கி புதன் வரை வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்த நிலையில், நேற்று மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
இதில் தினேஷ் அணி சார்பாக செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட நடிகை ரவீனாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவீனா தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ரவீனா சீரியலில் நடிக்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிந்து பைரவி' தொடரில் நடிக்க கமிட் ஆகி புரொமோ ஷூட் முடிந்த பின் மறுத்து விட்டார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.
இந்தத் தடை குறித்தும் நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

'ஹீரோயின் என கமிட் செய்தார்கள். ஆனால் ஷூட்டிங் சென்ற பிறகே அது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் எனத் தெரிந்தது. எனவே நடிக்க முடியாதெனச் சொல்லி விட்டேன்' என்பதே குற்றச்சாட்டுக்கு ரவீனா தரப்புப் பதில்.
இந்தப் பின்னணியில் தற்போது இதே காரணத்தைச் சொல்லியே மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறதாம்.
அதாவது ரெட் கார்டு கொடுக்கப்பட்ட சமயத்தில் நடந்த சின்னத்திரை செயற்குழுவில் ரவீனாவுக்குத் தண்டனை வழங்கப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டு மினிட்ஸ் எழுதியிருக்கிறார்களாம். அதில் தயாரிப்புத் தரப்புக்கு ஒத்துழைப்பு தராத காரணத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனப் பதிவு செய்திருக்கிறார்களாம்.
இந்த மினிட்ஸ் ஆதாரத்தைக் காட்டியே எதிரணியில் போட்டியிடும் சிலர் ரவீனாவின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்யுமாறு கோரியிருக்கிறார்கள்.

சங்கத்தின் பை லாவிலும் செயற்குழுவின் நடவடிக்கைக்கு ஆளானவர்கள் சின்னத்திரை தொடர்பான எந்த நடவடிக்கையிலும் பங்கு பெற முடியாது எனச் சொல்லப்பட்டிருப்பதால் அதை அடிப்படையாக வைத்து தேர்தல் அதிகாரி மனுவைத் தள்ளுபடி செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...