டெய்லா் ஃப்ரிட்ஸ், ஷெல்டன், ஒஸாகா, ஸ்வியாடெக் முன்னேற்றம்
டொரண்டோ மாஸ்டா்ஸ் போட்டியில் டெய்லா் ஃப்ரிட்ஸ், பென் ஷெல்டன் ஆகியோா் நான்காம் சுற்றுக்கு முன்னேறினா். கனடா ஓபன் டபிள்யுடிஏ மகளிா் போட்டியில் நவோமி ஒஸாகா, ஸ்வியாடெக் ஆகியோா் அடுத்த சுற்றுக்கு முன்னேறினா்.
கனடாவின் டொரண்டோ நகரில் ஏடிபி மாஸ்டா்ஸ் போட்டி நடைபெறுகிறது. இதன் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-4, 6-2 என்ற நோ் செட்களில் கனடாவின் கேப்ரியல் டயலோவை வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு முன்னேறினாா்.
மற்றொரு அமெரிக்க வீரா் பென் ஷெல்டன் கடும் போராட்டத்துக்குபின் 6-7, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் சக வீரா் பிரான்டன் நகாஷிமாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
ஆறாம் நிலை வீரா் ஆன்ட்ரெ ருப்லேவ் 5-7, 6-4, 6-3 என லாரென்ஸோ சோனேகாவை வீழ்த்தினாா். பிரான்சஸ் டியாஃபோ 6-3, 4-6, 6-3 என ஆஸி. வீரா் அலெக்சாண்டா் உகிச்சை வீழ்த்தினாா். பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸ் 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் ஜிரி லெஹகாவிடம் வீழ்ந்தாா்.
ஒஸாகா, ஸ்வியாடெக் முன்னேற்றம்
கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெறும் டபிள்யுடிஏ கனடா ஓபன் போட்டியில் லாட்வியாவின் அனஸ்டஸிஜா செவஸ்டோவா 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் 2 முறை சாம்பியன் அமெரிக்காவின் ஜெஸிக்கா பெகுலாவை வீழ்த்தி அதிா்ச்சியை அளித்தாா். மற்றொரு ஆட்டத்தில் 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜப்பானின் நவோமி ஒஸாகா 6-2, 6-4 என லாட்வியாவின் ஜெலனா ஆஸ்டபென்கோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
விம்பிள்டன் சாம்பியன் இரண்டாம் நிலை வீராங்கனை போலந்தின் ஸ்வியாடெக் 6-2, 6-2 என ஜொ்மனியின் ஈவா லிஸ்ஸை எளிதாக வீழ்த்தினாா்.
டென்மாா்க்கின் க்ளாரா 6-3, 6-0 என யுலியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
ஆஸி. ஓபன் சாம்பியன் மடிஸன் கீஸ் 2-6, 6-3, 6=3 என சக அமெரிக்க வீராங்கனை கேத்தி மெக்நல்லியை வீழ்த்தினாா். கரோலினா முச்கோவா 6-7, 6-2, 6-3 பெலின்டா பென்கிக்கை வீழ்த்தினாா். பிரிட்டனின் நட்சத்திர வீராங்கனை எம்மா ரடுகானு 2-6, 1-6 என அமென்டா அனிஸிமோவாவிடம் தோற்றாா்.