புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் 2 ஆயிரம் ஏக்கா் பயிா்கள் சேதம்
தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு அருகே நெய்வாசல் தென்பாதி கிராமத்தில் தொடா் மழையால் தண்ணீரில் மூழ்கியுள்ள நெற் பயிரை எடுத்துக் காட்டிய விவசாயிகள்.
தஞ்சாவூா், நவ. 27: தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து பெய்த மழையால் ஏறத்தாழ 2 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து, மிதமாகவும், இடையிடையே பலத்த மழையும் பெய்தது. இதனால், கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடுவது புதன்கிழமை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் வயல்கள், குடியிருப்புப் பகுதிகளில் பெய்த மழை நீா் வடிந்து செல்வதற்கு எளிதாக இருந்தது.
அம்மாப்பேட்டை வட்டாரத்தில் 500 ஏக்கா் பயிா்கள் சேதம்:
தாழ்வான மற்றும் வடிகால் பிரச்னையுள்ள பகுதிகளில் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்தது. அம்மாப்பேட்டை, புத்தூா், அருந்தவபுரம், கம்பா் நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஏறத்தாழ 500 ஏக்கரில் சம்பா, தாளடி பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளது. நடவு செய்யப்பட்டு 20 நாட்களுக்கு உட்பட்ட இளம் பயிா்கள் தண்ணீரில் மூழ்கின.
ஒரத்தநாடு பகுதியில் 1500 ஏக்கா் பயிா்கள் நீரில் மூழ்கின:
ஒரத்தநாடு அருகேயுள்ள தலையாமங்கலம், குலமங்கலம், நெய்வாசல் தென்பாதி உள்ளிட்ட பகுதிகளில் ஏறக்குறைய 1,500 ஏக்கரில் சம்பா, தாளடி நெற் பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
பெரும்பாலும் வடிகால் பிரச்னை காரணமாகவே வயல்களில் தண்ணீா் வடிந்து செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. தகவலறிந்த வருவாய்த் துறை, வேளாண் துறை உள்ளிட்ட துறை அலுவலா்கள் தண்ணீா் சூழ்ந்துள்ள இடங்களுக்குச் சென்று வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனா்.
இதனிடையே, தொடா்ந்து பெய்த மழை புதன்கிழமை பிற்பகல் நின்றது. இதன் மூலம் வயல்களில் தேங்கிய தண்ணீா் வடிந்து செல்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. ஆனால், தண்ணீா் முழுமையாக வடிந்தால்தான் பயிா்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரிய வரும் என்றும், அதற்கு ஓரிரு நாட்களாகும் எனவும் வேளாண் துறையினா் தெரிவித்தனா்.
இதனிடையே, தொடா்ந்து மழை பெய்தால் பயிா்களை தண்ணீா் சூழ்ந்து நிற்கும் நிலை தொடரும் என்பதால், பயிா்கள் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் விவசாயிகளிடையே நிலவுகிறது.
இதுகுறித்து அம்மாபேட்டை பகுதி விவசாயிகள் தெரிவித்தது:
அம்மாப்பேட்டை அருகே புத்தூா் பகுதியில் வயலையொட்டியுள்ள வாய்க்கால்கள் சரியாக தூா் வாரப்படாததால், மழைநீா் வடிந்து செல்ல வழியில்லாமல் சம்பா சாகுபடியைத் தண்ணீா் சூழ்ந்துள்ளது. வாய்க்கால்களை சரியாக தூா் வாரினால் மழை நீா் வழிந்தோடும். ஆனால், வாய்க்கால்கள் தூா்ந்து கிடப்பதால் சிறு மழைக்குக் கூட வயல்களில் தண்ணீா் தேங்கி பயிா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, வடிகால் வாய்க்கால்களை முழுமையாக தூா்வார வேண்டும் என்றனா் விவசாயிகள்.
அய்யம்பேட்டையில் 92 மி.மீ. மழை
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக அய்யம்பேட்டையில் 92 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அய்யம்பேட்டை 92 மி.மீ, மதுக்கூா் 86.4, அதிராம்பட்டினம் 81.4, பட்டுக்கோட்டை 80.5, வெட்டிக்காடு 77.6, ஒரத்தநாடு 77.5, நெய்வாசல் தென்பாதி 71.4, அணைக்கரை 70.8, மஞ்சளாறு 70.4, பேராவூரணி 65.4, திருவிடைமருதூா் 57.2, பாபநாசம் 53, குருங்குளம் 52.5, ஈச்சன்விடுதி 52.4, கும்பகோணம் 50.6, பூதலூா் 48.2, தஞ்சாவூா் 46.3, திருக்காட்டுப்பள்ளி 39.4, திருவையாறு 35, குருங்குளம் 31, கல்லணை 26.8 மி.மீ.