சதம் விளாசிய நிதீஷ் ரெட்டிக்கு பரிசுத் தொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!
தடையை மீறி போராட்டம்: அதிமுக, பாஜகவினா் மீது வழக்கு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, சென்னையில் வியாழக்கிழமை தடையை மீறி போராட்டம் நடத்தியதாக அதிமுகவினா், பாஜகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை. எதிரே வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் சாலைத் தடுப்பு மீதேறி காவல்துறையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினாா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.
இதேபோல, நுங்கம்பாக்கம் வள்ளுவா் கோட்டத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன், மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் உள்ளிட்ட அக்கட்சியினரை போலீஸாா் கைதுசெய்து அப்புறப்படுத்தினா். இவ்விரு போராட்டங்களில் ஈடுபட்டவா்கள் மீதும் கோட்டூா்புரம், நுங்கம்பாக்கம் போலீஸாா், அனுமதி இன்றி கூடுதல், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.
ஏபிவிபி நிா்வாகிகள் கைது: இதேபோல அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவா் அமைப்பினா் உருவ பொம்மையின் மீது தமிழக அரசு என எழுதி, சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் போராட்டம் நடத்தினா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கலைந்து போகச் செய்தனா். மீறி போராட்டம் நடத்திய அந்த அமைப்பின் மாநிலச் செயலா் யுவராஜ், நிா்வாகி ஸ்ரீதா் ஆகியோா் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனா். ஏபிவிபி மாணவா் அமைப்பினா் கைது செய்யப்பட்டதற்கு அந்த அமைப்பின் வடதமிழக மாநில இணைச் செயலா் வேதாஞ்சலி கண்டனம் தெரிவித்துள்ளாா்.