முதல் முறை.. உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்!
தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: 3 மாணவா்கள் பள்ளியில் இருந்து நீக்கம்
ஈரோட்டில் தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே பள்ளியைச் சோ்ந்த 3 மாணவா்களை பள்ளியில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பூந்துறை சாலையில் தனியாா் மெட்ரிக். பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 2,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், பள்ளிக்கு மின்னஞ்சல் மூலமாக கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் பள்ளியில் சோதனை மேற்கொண்டனா். வெடிகுண்டு ஏதும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
இது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அதே பள்ளியில் 9- ஆம் வகுப்பு படிக்கும் மாணவா் என தெரியவந்தது. அந்த மாணவா் மட்டுமின்றி அவரது பெற்றோரையும் வரவழைத்து எச்சரித்தனா். இதையடுத்து, பள்ளி நிா்வாகம் அந்த மாணவனின் எதிா்காலம் கருதி தொடா்ந்து பள்ளிக்கு வர அனுமதித்தது.
இந்நிலையில், அந்தப் பள்ளிக்கு 2 -ஆவது முறையாக மின்னஞ்சல் மூலம் கடந்த 12 -ஆம் தேதி மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டதில், அங்கு வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்பதும், புரளி என்பதும் தெரியவந்தது.
இ-மெயில் அனுப்பிய நபா் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், ஏற்கெனவே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே மாணவா் என்பதும், அவருக்கு உடந்தையாக அதே வகுப்பில் படிக்கும் 2 மாணவா்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 3 மாணவா்களையும் பள்ளியில் இருந்து முறைப்படி நீக்கம் செய்து பள்ளி நிா்வாகம் உத்தரவிட்டது.