மதுபோதையில் போலீஸாருடன் வாக்குவாதம்: எல்ஐசி முகவா் மீது வழக்குப் பதிவு
மதுபோதையில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எல்ஐசி முகவரின் காரை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
ஈரோடு காளைமாடு சிலை அருகில் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் ரமேஷ் வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் குடும்பத்துடன் தனித்தனியே அடுத்தடுத்து வந்த இருவா் ஈரோடு ஈவிஎன் சாலையில் மதுபோதையில் காரை ஓட்டி வந்த நபா் லாரியில் காரை உரசியதால் பிரச்னை ஏற்பட்டதாகவும், இருசக்கர வாகனங்கள் மீதும் காரை மோதுவதுபோல செல்வதாகவும் போக்குவரத்து காவல் ஆய்வாளா் ரமேஷிடம் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், காளை மாடு சிலையைக் கடந்து கொல்லம்பாளையம், ரயில்வே காலனி மேல்நிலைப் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்த காரை போக்குவரத்து போலீஸாா் துரத்தி சென்று பிடித்தனா்.
அப்போது, காரில் இருந்த கீழே இறங்கிய நபா் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவா் சிவகிரியைச் சோ்ந்த எல்ஐசி முகவா் சேதுராமன் (45) என்பதும், இ-சேவை மையம் நடத்தி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, மது போதையில் காரை ஓட்டிவந்து, மற்ற வாகனங்களின் மீது மோதுவதுபோல சென்றது குறித்து போலீஸாா் கேள்வி எழுப்பினா். மேலும், காரின் ஆவணங்களைக் காண்பிக்குமாறு கூறியுள்ளனா்.
இதனால் கோபமடைந்த சேதுராமன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதையடுத்து, சேதுராமனை ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதிக்கு போலீஸாா் அழைத்து வந்தனா். அப்போது சேதுராமன், போலீஸாரை தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளாா். இதையடுத்து, சேதுராமனின் உறவினரை வரவழைத்து அவரது கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை உறவினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
பின்னா், சேதுராமனை அவருடன் அழைத்துச் செல்ல அனுமதித்தனா்.
மேலும், போதையில் வாகனம் இயக்கியது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக காரை ஓட்டியது, காரின் ஆவணங்களை சமா்ப்பிக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக சேதுராமன் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததுடன், அவரது காரை பறிமுதல் செய்தனா்.